தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்… கார்கேவுடன் அடம்பிடித்த கே.எஸ்.அழகிரி?!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2023, 10:01 pm
KS Azhagiri - Updatenews360
Quick Share

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் கே.எஸ்.அழகிரி. கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து நீடித்து வருகிறார் கேஎஸ் அழகிரி.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ். அழகிரி நீக்கப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக ஜோதிமணி எம்பி, கார்த்தி சிதம்பரம் எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் செல்வபெருந்தகை என பலரது பெயர்கள் அடிபட்டன.

மேலும் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டால் தமிழ்நாடு சட்டசபை குழு தலைவராக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்படலாம் எனவும் ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன.
மல்லிகார்ஜூன கார்கேவுடனான சந்திப்பின் போது, தாமே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியதாக பெங்களூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது பதவி காலத்தில் காங்கிரஸில் கோஷ்டிபூசலை வெகுவாக குறைத்துவிட்டதாகவும் ஆளும் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் இணக்கமான போக்கை பிரச்சனையில்லாமல் கையாண்டு வருவதாகவும் கே.எஸ். அழகிரி, கார்கேவிடம் விவரித்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமது பதவியை பறித்தால் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைவார்கள்; இதனால்தான் தம்முடன் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் பெங்களூர் வந்துள்ளனர் எனவும் கே.எஸ்.அழகிரி சுட்டிக்காட்டியதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் 5 ஆண்டுகள் தலைவராக நீடித்துவிட்ட பிறகு, கட்சி மேலிடம் புதிய தலைவரை நியமிப்பது ஒன்றும் பிரச்சனைக்குரியது அல்ல. கே.எஸ்.அழகிரிதான் தமக்கும் செல்வாக்கு இருக்கிறது என பிரச்சனையை உருவாக்குவதற்காகவே பெங்களூர் சென்றுள்ளார் என்கின்றனர் அவருக்கு எதிரான கோஷ்டிகளின் தலைவர்கள். இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரங்களில் அடுத்தது என்னவாக இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Views: - 260

0

0