தேர்தல் முடிவுக்கு பின்பு அமைச்சரவை மாற்றமா?… தடுமாற்றத்தில் திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
27 April 2024, 9:11 pm
DMK
Quick Share

தேர்தல் முடிவுக்கு பின்பு அமைச்சரவை மாற்றமா?… தடுமாற்றத்தில் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியிலாவது 2019ஐ விட வாக்கு சதவீதம் திமுக கூட்டணிக்கு குறைந்தால் அந்த தொகுதிகளின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீது சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்ற தயங்க மாட்டேன் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அப்படி இருந்தும் கூட தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் திமுக கூட்டணியால் 27 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது கடினம். மற்ற 12 தொகுதிகளில் அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையேபலத்த சவாலை திமுக.சந்திக்க வேண்டிய நிலையே காணப்படுகிறது. அங்கும் போராடித்தான் சில தொகுதிகளை திமுக ஜெயிக்க முடியும் என்று தமிழக உளவுத்துறை
தேர்தல் நடப்பதற்கு ஒரு நாள் முன்பாக எடுத்த ஒரு ரகசிய சர்வேயை ஸ்டாலினுக்கு அனுப்பியதாக தெரிகிறது. அதைப் பார்த்ததும் அவர் அதிர்ந்து போய்விட்டார் என்று கூறப்பட்டது. ஏனென்றால் திமுகவின் தொழில்நுட்ப பிரிவு அணி எடுத்த முதல் ரகசிய சர்வேயிலும் இதே தகவல்தான் முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது, என்கிறார்கள்.

மேலும் படிக்க: நாம கேட்டது… அவங்க கொடுத்தது : கொஞ்சம் கூட கருணை இல்ல.. BJPக்கு தமிழக Congress கண்டனம்!

ஆனால் தமிழக உளவுத்துறை இரண்டாம் கட்டமாக தேர்தல் நடந்த ஏப்ரல் 19ம்தேதியன்று எடுத்த இன்னொரு ரகசிய சர்வேயில் திமுக கூட்டணி 36 இடங்களை கைப்பற்றுவது உறுதி. மூன்று இடங்களில் மட்டுமே போட்டி மிகக் கடுமையாக உள்ளது. அங்கும் கூட 15 முதல் 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதாக கூறுகிறார்கள். இதன் காரணமாகத்தான் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றத் தயங்க மாட்டேன் என்று முன்பு அதிரடி காட்டிய அவர் தற்போது அந்த சாட்டையை ஒரு ஓரமாக வைத்துவிட்டார் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாகவே அடிபடுகிறது.

அதேநேரம் சில தொகுதிகளில் மட்டும் வெற்றி வித்தியாசம் சற்று குறைவாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முதலமைச்சர் தரப்பு தயாராக இல்லையாம். அதாவது 2019 தேர்தலை ஒப்பிடுகையில் எதிர்க்கட்சி கூட்டணி இரண்டாக பிரிந்து நிற்கிறது. அப்படியானால் கடந்த முறையைவிட மிக அதிகளவிலான வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே மக்கள் திமுக ஆட்சியை விரும்புகிறார்கள் என அர்த்தம் என்று கூறுகிறாராம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 2 கோடியே 28 லட்சம் ஓட்டுகளை அள்ளியது. சுமார் 17 லட்சம் ஓட்டுகளை அந்தத் தேர்தலில் வாங்கிய நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தற்போது திமுக கூட்டணியில்தான் உள்ளது. இந்த கணக்கின்படி பார்த்தால் நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் பதிவான 4 கோடியே 34 லட்சத்து 58 ஆயிரம் ஓட்டுகளில் திமுக கூட்டணிக்கு மொத்தம் 2 கோடியே 45 லட்சம் ஓட்டுகள் கிடைக்கவேண்டும். ஆனால் இவ்வளவு ஓட்டுகளை
திமுக கூட்டணி வாங்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

பலத்த மும்முனைப்போட்டி நிலவுவதால் 2 கோடி வரையிலான வாக்குகளை மட்டுமே திமுக தலைமையிலான 13 கட்சிகள் கூட்டணியால் பெற முடியும். எனினும் இதற்கு 2019 தேர்தலை விட தற்போது 3 சதவீதம் வாக்குப் பதிவு குறைந்து இருப்பதை காரணமாக கூற முடியாது.

அதேநேரம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, அரசு ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி,புதுமைப் பெண் திட்டம், அரசு சாதாரண டவுன் பஸ்களில் மகளிர் இலவச பயணம் என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திய பிறகும் வாக்கு வித்தியாசம் குறைந்தால் 2026 தேர்தலை எதிர்கொள்வது சவாலானதாக மாறிவிடும் என்பதுதான் அறிவாலயத்தின் சிந்தனையாக உள்ளது, என்கிறார்கள்.

மேலும் மின் கட்டணம், சொத்து வரி பல மடங்கு உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் வரை அதிகரிப்பு, போதைப் பொருள் தாராள நடமாட்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் தமிழக மக்களிடம் திமுக அரசு மீது கடும் அதிருப்தி காணப்படுகிறது.

திமுக அரசின் நலத் திட்டங்கள் எல்லாம் அப்படியே முழுமையாக வாக்குகளை பெற்று தந்து விடாது. தவிர சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை முந்தைய ஆட்சியையும் மக்கள் ஒப்பிட்டு பார்ப்பார்கள். அதன்படி பார்த்தால் அதிமுக ஆட்சி காலத்தில்
திருமணம் ஆகாத ஏழை மற்றும் பட்டதாரி பெண்களுக்கு தாலிக்கு ஒரு பவுன் தங்கம், 25 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகை, பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, கிராமப்புறப் ஏழைப் பெண்களுக்கு பசுமாடு, ஆடுகள், கோழிகள் இலவசமாக வழங்கப்பட்டது போன்றவை நன்மை பயக்கும் திட்டங்களாக அவர்களுக்கு தெரிய வாய்ப்பு உண்டு.

மேலும் 2026 தேர்தல் சமயத்தில் எதிர் அணியினர் ஒன்றிணையலாம், தமிழக வெற்றிக் கழகம் புதிதாக வந்து வாக்குகளைப் பிரிக்கலாம், ஐந்தாண்டு கால ஆட்சி மீது அதிருப்தி உருவாகியிருக்கலாம்… இப்படி கவனம் கொள்ள வேண்டிய அம்சங்களும் நிறைய இருக்கின்றன.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவது இதுதான்: தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 50 சதவீத வாக்குகளை வாங்க விட்டால் அக் கூட்டணி 2026ல் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதில் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏனென்றால் திமுக கூட்டணியில் தற்போது இடம் பெற்றுள்ள ஒரு சில கட்சிகளே கூட எதிர் முனையில் உள்ள அணிகளுக்கு தாவலாம்.

திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றாலும் கூட ஒருவேளை அத்தனை கணிப்புகளையும் கடந்து எல்லா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஆளும் கட்சியான திமுகவுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

ஏனென்றால் திமுக அணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்றவை திமுகவுடன் அட்டைபோல் ஒட்டிக் கொண்டு இருப்பதால் ஆளும் கட்சியான திமுகவின் தவறுகளை வெளிப்படையாக கண்டிக்கவோ, சுட்டிக்காட்டவோ செய்ய மாட்டார்கள். இதனால் அந்த கட்சிகள் மீதான மதிப்பு மக்களிடம் வெகுவாக குறைந்து போய்விடும். தவிர மத்தியில் மீண்டும் மோடி அரசு அமைந்து விட்டால் திமுகவின் கணக்குகள் அத்தனையும் தவிடு பொடி ஆகிவிடவும் செய்யலாம்.

மேலும் பாஜக கூட்டணியில் இருந்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியேறிய அதிமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து 2024 தேர்தலை சந்தித்தும் விட்டது. தவிர 2026லிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்தும் உள்ளது. எனவே பாஜகவுடன் அதிமுக ரகசிய கூட்டணி வைத்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலினால் தொடர்ந்து சொல்ல முடியாது. அதை மக்கள் நம்பவும் மாட்டார்கள். அதுவும் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 28 சதவீத ஓட்டுகளுக்கும் குறையாமல் வாங்கி விட்டால் அக்கட்சியும் திமுகவுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு 2026 தேர்தலில் கடும் சவாலை அளிக்கும்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்து அப்போது தேர்தலை சந்திக்க நேர்ந்ததால் திமுகவுக்கு இன்னும் இடியாப்ப சிக்கல்தான். திமுகவின் வாக்கு வங்கியாக இருக்கும் பட்டியலின மற்றும் விளிம்பு நிலை மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை விஜய் கட்சி அப்படியே ஸ்வாகா செய்துவிடும் வாய்ப்புகளே அதிகம். அமைச்சர் உதயநிதியிடம் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்து 2026 தேர்தலில் களமிறக்கினாலும் அவரால் நடிகர் விஜய்க்கு ஈடு கொடுக்க முடியுமா? என்பதும் சந்தேகம்தான்.

இதையெல்லாம் கணக்கு போட்டுதான் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் குறைந்தால் சாட்டையை சுழற்றுவேன் என்று முன்பு கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வளவு சீக்கிரமாக மாவட்டச் செயலாளர்கள் மீதோ, பொறுப்பு அமைச்சர்கள் மீதோ நடவடிக்கை எடுத்துவிட மாட்டார். இதுதான் தற்போதைய நிலைமை.

ஒருவேளை அவ்வாறு நடவடிக்கை எடுத்துவிட்டால் வரும் தேர்தல்களில் மேலும் எதிர்மறை விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என முதலமைச்சர் தரப்பு கருதுகிறதாம். எனவே தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது என்கிறார்கள்.இதனால் வாக்குகள் குறைந்தாலும் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சில அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் அப்பாடா! என
நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

அதேநேரம் ஏப்ரல் 29ம் தேதி முதல் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாக முதலில்
தகவல் வெளியானது. ஆனால் சமீப காலமாக சீனாவுக்கு ஆதரவு நாடாக அது மாறிவிட்டதால் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் அங்கே சென்றால் அதை வைத்து யாரும் அரசியல் செய்து விடக்கூடாது என்பதற்காக கடைசி நேரத்தில் தனது முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றிக் கொண்டு தற்போது கொடைக்கானலுக்கு ஐந்து நாள் பயணமாக குடும்பத்தினருடன் செல்கிறார்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திமுக தலைவர் போடும் அரசியல் கணக்குகள் பலிக்குமா? என்பதை தெரிந்துகொள்ள ஜூன் நான்கு வரை காத்திருக்கவேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

Views: - 103

0

0