கோவை மக்களையே அவமானப்படுத்திட்டாங்க..சீனிவாசனுக்கு திமுக துணை இருக்கும் : திமுக எம்பி பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan14 செப்டம்பர் 2024, 10:55 காலை
ஜி.எஸ்.டி குறைதீர்க்கும் கூட்டத்தில் அழகாக கொங்கு தமிழில் கோரிக்கையை முன் வைத்த அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளர் சீனிவாசன் மிரட்டப்பட்டதாகவும், அதன் மூலம் கோவை மக்களை அவமானப்படுத்தி உள்ளனர் எனவும் கூறி உள்ள கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இந்த சம்பவத்திற்கு வன்மையாக கண்டனம் தெரிவிப்பதுடன் சீனிவாசனுக்கு தி.மு.க துணை நிற்கும் என்றும் தெரிவித்து உள்ளார்..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் வருத்தம் தெரிவித்த தனிப்பட்ட வீடியோவை பா.ஜ.க வினர் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கோவை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கொங்கு தமிழில் அழகாக தமது கோரிக்கையை பேசிய நிலையில் பா.ஜ.க வினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அடுத்த நாள் அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாகவும், அதே போல் சூலூரில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தொடர்பாக இளைஞர் ஒருவர் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கொங்கு மண்டலத்தில் அதிகமான பாதிப்பு ஜி.எஸ்.டி”யினால் தான் ஆனால் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தர்பார் ஆட்சி தான் தற்போது நடக்கிறது எனவும் பிஸ்கட்டிற்கு 18% ஜி.எஸ்.டி, தங்கத்திற்கு 3% ஜி.எஸ்.டி விதித்த போது அறிந்து கொள்ளலாம் இது யாருக்கான ஆட்சி என குறிப்பிட்டார்.
அன்னபூர்னா சீனிவாசன் வருத்தம் தெரிவிக்கும் வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா..? எனவும் அது தனி மனித சட்ட விதி மீறல் எனவும் அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுவதால் அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானப் படுத்தியது போல் உள்ளது எனவும் ஜி.எஸ்.டியால் 30 சதவீதம் தொழிற் கூடங்கள் மூடப்பட்டு விட்டதாகவும் குறைதீர் கூட்டம் என்ற பெயரில் அவர்களின் குட்டை அவர்களே வெளிப்படுத்தி உள்ளனர் எனவும் கூறியதுடன் கோவை மக்களை அவமானப்படுத்தி உள்ளனர் என்றும் அவர் மிரட்டப்பட்டதற்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன் தி.மு.க அவருக்கு துணை நிற்கும் என்றும் உறுதி அளித்தார்.
மத்திய அமைச்சரிடம் வருத்தம் தெரிவிக்கும் வீடியோ வெளியிட்டதற்கு தான் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தாரே தவிர அந்த சம்பவத்திற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர் தொழில் அமைப்பினரின் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராகிய தனக்கு அழைப்பு இல்லை ஆனால் முதலமைச்சர் பங்கேற்ற மாணவர்களுக்கான உதவிகளை வழங்கும் விழாவில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசலுக்கு முதல் வரிசையில் இருக்கை கொடுத்ததாகவும் ஆனால் பிரித்தாள்வதே இவர்களது வேலை என்றும் விமர்சித்தார்.
0
0