திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா…? கொள்கை வேறு; கூட்டணி வேறு… அழகிரியின் திடீர் ஆவேசம்!

Author: Babu Lakshmanan
14 November 2022, 6:07 pm
Quick Share

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்க கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர் முடிவெடுக்கத் தாமதித்ததை சுட்டிக் காட்டியதுடன் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலையும் செய்தது.

இதேபோல தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், பேரறிவாளனை விடுவிக்கும் காரணமே இவர்களும் பொருந்தும் என்று கூறி நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்யும்படி கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டது. 6 பேர் விடுவிக்கப்பட்டதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் இதுபற்றி, “பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய, உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அதேநேரம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது முற்றிலும் தவறானது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இந்திய நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு செயல்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள திமுகவும், காங்கிரசும் எதிரும் புதிருமாக கருத்து தெரிவித்தது, கடந்த ஒரு வாரமாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதேபோல் 10 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்திலும் இரு கட்சிகளும் மறைமுகமாக மோதிக் கொள்வது போல் எதிரெதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

இதனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுமா? என்ற மிகப்பெரிய கேள்வி டெல்லி அரசியல் வட்டாரத்தில் எழுந்து இருக்கிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், செய்தியாளரிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, “தேசிய கல்விக் கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலத்துக்குப் பிறகு ஏதாவது ஒரு இந்திய மொழி என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த காலத்திலும் இந்தி திணிப்பு என்பது இருக்காது. கடந்த 55 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ் அழிந்து வருகிறது. தமிழக திராவிட கட்சிகள் இருமொழிக் கொள்கை என்கின்றனர். ஆனால், தமிழகத்தில் மாற்றுமொழியை அடிப்படையாகக் கொண்டு, 560 பள்ளிகள் இயங்கி வருகின்றன. பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி விட்டு, பால் விற்பனை விலையை ரூ.12 உயர்த்தியுள்ளனர். இதனால், டீ விலை ரூ.15 ஆக உயர்ந்துள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும். அவர்கள் விடுதலை எங்களுக்கு ஏற்புடையதல்ல” என்று தெரிவித்தார்.

ஆனாலும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை என்று தெரிகிறது.

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை சென்னையில் கொண்டாடிய அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராஜீவ் கொலையாளிகளை வெளியே விடுவது தவறானது. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் சந்தேகத்தின் பேரில் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன் ? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லதல்ல” என
குறிப்பிட்டார்.

ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை திமுக வரவேற்றுள்ளதே? என்ற கேள்விக்கு, “கூட்டணி வேறு கொள்கை வேறு, காங்கிரஸ், திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். ஆனால் மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் நாங்கள் ஒன்றாகவே பயணிக்கிறோம்” என்று அவர் பதிலளித்தார்.

சிறையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்ய கோரி திமுக அரசை தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவீர்களா? என்ற இன்னொரு கேள்விக்கு “கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று நழுவிக் கொண்டார்.

“கே எஸ் அழகிரி சொல்வது அவருடைய சொந்த கருத்தாகவே தோன்றுகிறது. ஏனென்றால் 10% இட ஒதுக்கீடு விஷயத்தில் தலைமை எடுக்கும் முடிவுதான் அதிகாரப்பூர்வமானது என்று சில நாட்களுக்கு முன்பு அவர்தான் கூறி இருந்தார். ஆனால் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி தொடர்பான விஷயத்தில் மட்டும், நாங்கள் பாஜகவுக்கு எதிராக ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறோம் “என்கிறார்.

இது திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் ஒரு போதும் வெளியேற மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துவது போல இருக்கிறது. ஆனால் டெல்லி தலைவர்களோ, இதில் இருந்து முற்றிலும் மாறுபடுவது தெரிகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் நளினி, முருகன், உள்ளிட்ட 6 பேர் விடுதலை தொடர்பாக டெல்லியில் கருத்து தெரிவித்த காங்கிரசின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, இந்த தீர்ப்பு தொடர்பாக திமுகவுடன் முரண்படுவோமா? என்று கேட்கிறீர்கள். கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடனே முரண்படும்போது, கூட்டணி கட்சியுடன் மட்டும் எப்படி உடன்படுவோம்?…”என்று அதிரடி காட்டியிருந்தார்.

அப்படியென்றால் திமுகவின் கருத்தை ஏற்க முடியாது என்றே அர்த்தம் ஆகிறது. அதேநேரம் தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர், திமுக கூட்டணியில் தொடர்ந்து தங்கள் கட்சி நீடிக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் டெல்லி மேலிடமோ, 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் என நினைக்கிறது. குறிப்பாக திமுகதான் இதை முன்னெடுக்கவேண்டும் என்றும் கருதுகிறது.

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விழுந்து விழுந்து திமுகவை ஆதரிப்பதால் எதிர் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று அறிவிக்க திமுக தயக்கம் காட்டுவது தெரிகிறது. ஏனென்றால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பிரதமர் பதவி மீது ஒரு கண் உள்ளது என்று பரவலாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது. அல்லது தேசிய அளவில் தனது கட்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தரும் வகையில் தொகுதி பேரத்தில் காங்கிரசின் கோரிக்கையை ஸ்டாலின் நிராகரிக்கவும் வாய்ப்பு உண்டு.

இதனால் 2024 தேர்தலில் தமிழகத்தில் திமுக மட்டுமே குறைந்த பட்சம் 32 தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு எஞ்சிய 7 இடங்கள்தான் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் போட்டியிட அதிகபட்சமாக நான்கு தொகுதிகள் கிடைத்தாலே பெரிய விஷயம்.

இதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டாலும் கூட டெல்லி மேலிடம் ஒப்புக் கொள்ளுமா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒதுக்கியது போல ஒன்பது தொகுதிகளும் கிடையாது , 2024 தேர்தலில் ராகுலை பிரதமர் வேட்பாளராகவும் திமுக ஏற்க தயாராக இல்லை என்கிற நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் எப்படி ஒப்புக் கொள்ளும்? என்ற கேள்வியும் எழுகிறது. அப்போது டெல்லி மேலிடத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எவ்வாறு சமாதானப்படுத்துவார்கள் என்பதும் தெரியாத ஒன்று!

தங்களது ஆதரவு இல்லாமல் திமுகவால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதை டெல்லியில் காங்கிரஸ் மேலிடமும் நன்றாகவே உணர்ந்துள்ளது. அதனால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்ற பயத்தை காங்கிரஸ் மேலிடம் அவ்வப்போது திமுகவுக்கு காட்டிக்கொண்டே இருக்கும். இது இங்குள்ள தலைவர்களான
கே எஸ் அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் போன்றோருக்குத்தான் நெருக்கடியை ஏற்படுத்தும். ஏனென்றால் இவர்கள்தான் கண்களை மூடிக்கொண்டு திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள். தவிர எப்போதுமே டெல்லி தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்பதால் 2024 தேர்தல் வரை இவர்களின் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடரவே செய்யும்” என்பது அந்த அரசியல் விமர்சர்களின் ஆருடமாக உள்ளது.

Views: - 102

0

0