மண் காப்போம் இயக்கத்திற்கு ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசமும் ஆதரவு : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

Author: Babu Lakshmanan
8 June 2022, 1:08 pm
Quick Share

இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக, உத்தரப் பிரதேச அரசு தங்கள் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் நேற்று (ஜூன் 7) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. முன்னதாக, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மண் காப்போம் இயக்கம் சார்பில் லக்னோவில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் சத்குரு முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், அம்மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சர் திரு. சூர்யா பிரதாப் சாஹி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ராஜேஸ் பிண்டால், தலைமைச் செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.

விழாவில் சத்குரு பேசுகையில், “மனித குல வரலாற்றில் தற்போது முதல் முறையாக உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ‘மண் அழிவு’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்” என கூறி மண் வளம் இழப்பதன் இக்கட்டான நிலையை சுட்டிகாட்டி பேசினார். மேலும், இதை நம்மால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய சத்குரு, “மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் பாரதம் உலகிற்கு முன்னோடியாக தலைமை வகிக்க வேண்டும். ஏனென்றால், நாம் பாரதத்தில் மண்ணை ‘தாய் மண்’ என அழைக்கிறோம். குறிப்பாக, அதிக விவசாய நிலப்பரப்பை கொண்டுள்ள நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் இந்த முயற்சியில் தலைமை வகிக்க வேண்டும்” என்றார்.

சத்குருவின் கருத்துக்களை வரவேற்று பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “சத்குரு அவர்கள் ‘நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்’ இயக்கத்திற்காக கடந்த முறை உத்தரப் பிரதேசம் வந்ததற்கு பிறகு நாங்கள் 60 நதிகளுக்கு புத்துயிரூட்டும் பணிகளை செய்து வருகிறோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், அம்மாநிலத்தில் மண் வளத்தை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அவர், கங்கை நதியை தூய்மையாக வைத்து கொள்ள மேற்கொள்ளப்படும், ‘நமாமி கங்கா’ திட்டம் குறித்தும் பேசினார். அத்துடன், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மண் வளத்தை மீட்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு சத்குரு மார்ச் 21-ம் தேதி தொடங்கினார். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்து பின்னர் சத்குரு கடந்த மாதம் 29-ம் தேதி இந்தியா வந்தார். குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்களுக்கு சென்ற அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்று இவ்வியக்கத்திற்கு மனமார்ந்த ஆதரவை தெரிவித்தார்.

Views: - 619

0

0