உ.பி., உத்தரகாண்டில் பாஜக ஆட்சி உறுதி… 2 மாநிலங்களில் பாஜக முன்னிலை… பஞ்சாப்பில் ஆம்ஆத்மி… ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்ட காங்கிரஸ்!!

Author: Babu Lakshmanan
10 March 2022, 11:21 am

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக வெற்றிக்களிப்பில் திளைத்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதே போல உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும், பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், உ.பி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகளில் பாஜக 257 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 122 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 8 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியைப் பிடிக்க 202 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக கூடுதலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது.

BJP_FLAG_UpdateNews360

அதேபோல, 70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்டிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது. 44 இடங்களில் பாஜகவும், 21 இடங்களில் காங்கிரசும், ஆம்ஆத்மி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியைப் பிடிக்க 36 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், உத்தரகாண்டிலும் பாஜகவின் ஆட்சியே தொடர இருக்கிறது.

117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸை வீழ்த்தி ஆம்ஆத்மி முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. ஆம்ஆத்மி 89 இடங்களில் முன்னிலைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸின் இந்தப் படுதோல்விக்கு காரணம், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்களே ஆகும். வேளாண் சட்டம் கொண்டு வந்த எதிர்ப்பின் காரணமாக பாஜக 5 இடங்களிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளது. சிரோண்மனி அகாலி தளம் 9 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகர் சோனுசூட்டின் தங்கை மாள்விகா முன்னிலையில் உள்ளார். பஞ்சாப்பின் முதலமைச்சர் சரண்ஜித் சிங் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும் பின்னடைவை சந்தித்தள்ளார்.

மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு நடந்தத் தேர்தலில், பெரும்பான்மைக்கு 31 இடங்கள் என்ற நிலையில், சற்று இழுபறி ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாஜக 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேசிய மக்கள் கட்சி 12 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 4 இடங்களிலும முன்னிலை வகிக்கிறது. யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது சற்று இழுபறியதாகத்தான் உள்ளது.

BJP_Lotus_Symbol_UpdateNews360

40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தற்போது வரை யாரும் பெரும்பான்மையை எட்டவில்லை. ஆட்சியைப் பிடிக்க 21 இடங்கள் என்ற நிலையில், பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும் ஆம்ஆத்மி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் 4ல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸை மக்கள் புறக்கணித்திருப்பதாக தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?