சாலையில் உலா வந்த ஒற்றையானை…அலறி அடித்த ஓட்டம் பிடித்த பள்ளி மாணவர்கள்: பீதியில் பன்றிமலை மக்கள்..!!

Author: Rajesh
29 April 2022, 1:22 pm

திண்டுக்கல்: பன்றிமலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானையால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள ஆடலுர், பன்றிமலை, பெரியூர், குப்பம்மாள் பட்டி, கே.சி. பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகள் உள்ளன.

இந்த பகுதிகளில் கடந்த சில வருடங்களாக யானைகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் செய்யும் அட்டகாசம் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதே போல், பொது மக்களைத் தாக்குவதும் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரத்தில் கூட யானை தாக்கி வனத்துறை தற்காலிக பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று காலை பன்றிமலை தருமத்துப்பட்டி செல்லும் சாலையில் ஒற்றை யானை ஒன்று ரோட்டின் குறுக்கே தொடர்ந்து நடந்து வந்தது.

அதேபோல் அந்த யானை பொது மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளேயும் சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அங்குமிங்கும் ஓடினர். மேலும் பள்ளிக்கு செல்வதற்கு சென்ற மாணவ மாணவிகள் சாலையில் வேகமாக வந்த யானையை பார்த்து உயிர் பயத்தில் அருகிலிருந்த குன்றின் மீது ஏறி நின்றனர்.

இப்பகுதியில் அதிக விவசாயிகள் மற்றும் அதிக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. ஆகவே உடனடியாக அடர்ந்த வனத்துக்குள் காட்டு யானையை அனுப்ப வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் யானை சாலை மற்றும் பொதுமக்கள் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வந்ததால் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வன அலுவலர்கள் அறிவழகன், வெற்றிவேல் மற்றும் கொடைக்கானலில் இருந்து வந்த சிறப்பு படை உள்பட 25க்கும் மேற்பட்டோர் தற்போது யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் கூறும்போது யானையை அடர்ந்த வனத்துக்குள் அனுப்பினால் மட்டுமே இப்பகுதி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் என்று கூறினர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?