மின்வெட்டால் குறையும் மாணவர்களின் மதிப்பெண்.. இதுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு… ஓபிஎஸ் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
6 May 2022, 11:32 am
Quick Share

சென்னை : தேர்வு மையங்களில் ஏற்படும் மின்வெட்டினால் மாணவர்களின் கவனம் சிதறி மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளதால், அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் நிலக்கரி பற்றாக்குறை, மின் பயன்பாடு அதிகரிப்பு, நிலக்கரியை எடுத்து வரும் ரயில் பெட்டிகள் பற்றாக்குறை என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். இது குறித்து நான் எனது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியதோடு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும் இந்தப் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, மாண்புமிகு அமைச்சர் அவர்களும் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்தார்.

இருப்பினும், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அவ்வப்போது மின் வெட்டு ஏற்படுவது என்பது வாடிக்கையாக இருக்கிறது, இந்தச் சூழ்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் 05-05-2022 அன்று துவங்கி 28-05-2022 வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் 06-05-2022 அன்று துவங்கி 30-05-2022 வரையிலும் நடைபெற உள்ளது. இதனையொட்டி, கல்லூரித் தேர்வுகளும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைலர் அவர்கள் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் தேர்வு மையங்களில் மின்சார தடை ஏற்படாத வகையில் தடையில்லா மின்சார விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அதையும் மீறி மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் மண்டல தலைமைப் பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், நேற்று துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் மின் தடை ஏற்பட்டு, பின்னர் அரை மணி நேரத்தில் சரி செய்யப்பட்டதாகவும், வட சென்னை மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

பொதுத் தேர்வுகள் நடைபெறும் போது, தேர்வு மையங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் மின் தடை ஏற்படக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது. ஏனென்று சொன்னால், தேர்வு நடைபெறும் சமயங்களில் மாணவ, மாணவியரின் கவனம் படிப்பதில் தான் இருக்கும். அந்தத் தருணத்தில் மின் வெட்டு ஏற்பட்டால், குறிப்பாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டால் மாணவ, மாணவியர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன் அவர்களுடைய கவனமும் சிதறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இதன் காரணமாக, மின் வெட்டு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவியரின் மதிப்பெண்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாகும். மின் வெட்டினால், மாணவ, மாணவியரின் மதிப்பெண்கள் குறைந்துவிட்டன என்ற நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்த அரசிற்கு உள்ளது.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்ற மே மற்றும் ஜூன் மாதங்களில், தேர்வு மையங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் மின் வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 776

0

0