அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்… முதல்நாளிலேயே இபிஎஸ் காட்டிய அதிரடி… ஓபிஎஸ் ஆதரவாளர்களையும் சும்மா விடல..!!

Author: Babu Lakshmanan
11 July 2022, 11:50 am
Quick Share

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஜுன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என்று அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தள்ளுபடி செய்தது. இது ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில், அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, நிதமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. அதில், பொதுக்குழுவை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. மேலும், உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம்,விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அப்போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வழிமொழிந்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் உள்பட 16 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

அப்போது, கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கி பேசினர். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், “அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள் கட்சிக்கு தேவையா..? திமுக துணையுடன் அதிமுகவை அழிக்க நாடகம் நடத்தும் ஓபிஎஸ் கட்சிக்கு தேவையா..?,” எனக் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது :- ஓபிஎஸ் பொறாமை பிடித்தவர். சூழ்ச்சிமிக்கவர். தயவு தாட்சயணம் இல்லாமல் துரோகத்தை விளைவிக்கக் கூடியவர். அரசியல் அனாதையாகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் வேஷம் போடுகிறார்; அமைதியானவர் போல நடிக்கிறார்; ஓபிஎஸ் தனது நிழலையே நம்ப மாட்டார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து அதிமுகவின் 3ம் தலைமுறை தலைவராக இபிஎஸ் உருவெடுத்துள்ளார், எனப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, பொதுக்குழுவில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அப்போது, குறுக்கிட்டு பேசிய கே.பி. முனுசாமி, ஓபிஎஸ்-ஐ நீக்குவது குறித்து விரைவில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என தெரிவித்தார்.

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான தீர்மானத்தை இன்றே நிறைவேற்ற வேண்டும் என்று ஆலோனை நடத்தப்பட்டது.

இந்த சூழலில், திமுகவுடன் இணைந்து கட்சியை அழிக்க முயற்சித்ததாக அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்மொழிந்த தீர்மானத்தில், பொருளாளர் பொறுப்பு, கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல, கட்சியின் விதிகளுக்கும், கோட்பாடுகளையும் மீறி செயல்பட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Views: - 492

0

0