கடைசி வரை நெருக்கடி… செஸ் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வி… சாம்பியன் ஆனார் கார்ல்ஸன்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2023, 6:25 pm

‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர், இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர்.

அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.

தொடர்ந்து, வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் சுற்று இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றார். டை பிரேக்கர் முதல் சுற்றில் வெற்றி பெற பிரக்ஞானந்தா இறுதி வரை போராடியும் வெற்றி பெற முடியாமல் போனது.
இதனால், கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். இந்த ஆட்டத்தில், 41 நகர்த்தல்கள் வரை போட்டி சமநிலையில் காணப்பட்டது. எனினும், பிரக்ஞானந்தாவுக்கு நேரம் குறைவாக இருந்தது. இதனால், அவரால் வெற்றி பெற முடியாமல் போனது.

சிறிது நேரத்திற்கு பின்னர் 2-வது சுற்று போட்டி தொடங்கியது. இதில், கருப்பு காய்களுடன் போட்டியை ஆட தொடங்கிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

இந்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், ரேபிட் முறையில் 2 போட்டிகள் நடைபெறும் சூழல் இருந்தது. ஆனால் 2-வது சுற்று ஆட்டத்திலும் கார்ல்சன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.

இதனால், பிரக்ஞானந்தா வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருந்தது. கார்ல்சன் அதிரடியாக காய்களை நகர்த்தி வெற்றி பெற்றார். இதனால், உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

  • director pandiraj said that he afraid of soori film director become his competition இவன் நமக்கு போட்டியா வந்துடுவானோ?- சூரி படத்தை பார்த்து பயந்து போயிருக்கும் பிரபலம்!