இருப்பைக் காட்டிக் கொள்கிறாரா செந்தில் பாலாஜி? அண்ணாமலை குறித்து அன்றும், இன்றும் ட்விஸ்ட் பேச்சு!

Author: Hariharasudhan
13 March 2025, 11:07 am

லண்டனில் படிக்கச் சென்றீர்களே, அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா? அல்லது இந்தியில் பேசினீர்களா? என அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர்: மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன கூட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று மாலை கரூரில் திமுக சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில், மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் பேசிய அவர், “பாஜக மாநிலத் தலைவர் நம்முடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, மாலை ஒரு பேச்சு, விடிந்தால் ஒரு பேச்சு என பேசி வருகிறார். நேற்று என்ன பேசினோம் என்பது இன்று தெரியாது. இன்று என்னப் பேசினோம் என்பது நாளை தெரியாது.

அவர் இந்தி குறித்தும், மும்மொழிக் கொள்கை குறித்தும் பேசி வருகிறார். அவரிடம் நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். லண்டனில் படிக்கச் சென்றீர்களே, அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா? அல்லது இந்தியில் பேசினீர்களா? எந்த மொழியில் பேசினீர்கள்? ஏன் அப்போது மட்டும் ஆங்கிலத்தில் பேசினீர்கள் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள். அதன் பிறகு மும்மொழிக் கொள்கை குறித்து நாம் பேசலாம்” எனக் கூறியுள்ளார்.

Senthil Balaji Vs Annamalai

முன்னதாக, செந்தில் பாலாஜியின் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது. இது தொடர்பாக அண்ணாமலை தெரிவித்திருந்த கருத்துக்கு, “அரசியல் கோமாளிகளுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. அவரின் பெயரையெல்லாம் வரும் நாட்களில் தவிர்த்து விடுங்கள். மக்களைப் பார்த்து சொல்வதற்கு அவர்களிடம் கருத்துகள் இல்லை. அதனால் பத்திரிகை, ஊடகங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்” என செந்தில் பாலாஜி பதிலளித்திருந்தார்.

இதையும் படிங்க: இனிமேல் இப்படித்தான்… ஒரே படத்தில் மூன்று நடிகைகளை கேட்டு அடம் பிடிக்கும் இளம் நடிகர்!

ஆனால், மேடை போட்டு அண்ணாமலையைப் பார்த்து கேள்வி கேட்கிறேன் என செந்தில் பாலாஜி பதிலளித்திருப்பது அரசியல் கவனம் பெற்றுள்ளது. அதேநேரம், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிறையில் இருந்து வந்த பிறகு சத்தம் இல்லாமல் இருந்த செந்தில் பாலாஜி, தற்போது பாஜகவுக்கு பதில் சொல்வது என்பது, கொங்கு மண்டலத்தில் தனது அரசியல் செல்வாக்கை காண்பிக்கவே என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

  • Ravi Mohan married for the second time? Video goes viral on the internet! 2வது திருமணம் செய்த ரவி மோகன் ? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!