இவன் நமக்கு போட்டியா வந்துடுவானோ?- சூரி படத்தை பார்த்து பயந்து போயிருக்கும் பிரபலம்!
Author: Prasad8 May 2025, 3:44 pm
காமெடி நடிகர் டூ ஹீரோ
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். தனது உடலை மெருகேற்றி இவர் எடுத்த டிரான்ஃபர்மேசன் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. “விடுதலை” திரைப்படத்தை தொடர்ந்து “கருடன்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சூரி, அதனை தொடர்ந்து தற்போது “மாமன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சூரியின் கதையம்சத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகிற 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் இயக்குனரான பிரசாந்த் பாண்டியராஜன், இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாண்டிராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நமக்கு போட்டியா வந்துடுவானோ?
அப்போது மேடையில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ், “இயக்குனர் பிரசாந்த் என்னிடம் இத்திரைப்படத்தின் டிரைலரை போட்டுக்காட்டினான். அப்போது பசங்க 2 படத்தில் இருந்து கொஞ்சம் காட்சிகள் இதில் இருக்கும், கடைக்குட்டி சிங்கம் படத்தில் இருந்தும் சில ரெஃபரன்ஸ் இருக்கும், நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இருந்தும் ரெஃபரன்ஸ் இருக்கும் என்று கூறினான். இதில் எதுவும் எனக்கு பிரச்சனை இல்லை, இங்கிலிஷ் படம் கொரியன் படம் போன்றவற்றில் இருந்து சுட்டால்தான் அது சுடுறது என்று அர்த்தம்.
மக்களின் வாழ்க்கையில் இருந்து நானே சுட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். அதில் இருந்து நீ சுடுவது ஒன்றும் பிரச்சனை இல்லைடா என்று சொன்னேன். ஆனால் எனக்கு அதற்கு பின்புதான் ஒரு பயம் வந்தது, நான் மக்களின் சென்டிமென்ட்டை மையமாக வைத்து படம் எடுத்து பிழைத்துக்கொண்டிருக்கிறேன். இவன் அதற்கும் போட்டியாக வந்துவிடுவானோ என்று ஒரு சின்ன பயம் இருக்கு” என்று நகைச்சுவையாக கூறினார். இயக்குனர் பாண்டிராஜ் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“பசங்க”, “வம்சம்”, “மெரினா”, “கடைக்குட்டி சிங்கம்”, “நம்ம வீட்டுப் பிள்ளை”, “எதற்கும் துணிந்தவன்” போன்ற பல திரைப்படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது விஜய் சேதுபதி-நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் “தலைவன் தலைவி” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.