90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?
Author: Prasad20 June 2025, 12:05 pm
படுதோல்வியடைந்த சிக்கந்தர்
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது. இத்திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் ரூ.177 கோடிகளையே வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இத்திரைப்படம் சல்மான் கானின் கெரியரில் படுமோசமான திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியான நாளிலேயே இணையத்தில் இத்திரைப்படம் வெளியானதினால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

91 கோடி நஷ்டஈடு
“சிகந்தர்” திரைப்படம் வெளியான அதே நாளில் இணையத்தில் சட்டவிரோதமாக இத்திரைப்படத்தின் தெளிவான HD Print வெளிவந்ததால் தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலாவிற்கு ரூ.91 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக இந்த நஷ்டத்தை ஈடுகட்ட தயாரிப்பாளர் இன்ஸுரன்ஸில் கிளைம் செய்யவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. எனினும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறவில்லை என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.
