விஜய்க்கு எழுதிய கதையில் நடிக்கும் அஜித் : AK62வில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்… பிரபல இயக்குநருக்கு கிடைத்த சான்ஸ்!!

Author: Babu Lakshmanan
28 January 2023, 5:52 pm
Quick Share

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், அமீர், பாவனி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.190 கோடி எனவும் சொல்லப்பட்டது.

இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், அஜித் – விக்னேஷ் கூட்டணி இந்தப்படத்தை டிராப் செய்வதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் தயாரிப்பு தரப்புக்கு இந்தப் படத்தின் கதை பிடிக்காததால் விக்னேஷ் சிவன் விலகியதாகவும், வேறு ஒரு இயக்குநர் அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் தடம், தடையற தாக்க, மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

மேலும், கடந்த 2019ம் ஆண்டு விஜய் நடிக்கவுள்ள படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. விஜய் – மகிழ் திருமேனி இருவருடைய சந்திப்பு நடந்துள்ளது. அப்போது மகிழ் திருமேனி கூறிய கதைக்கு விஜய் ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் தொடரவில்லை.

இந்நிலையில் விஜய்க்கு மகிழ் திருமேனி கூறிய மாஸ் கதை கூட ஏகே 62 படமாக இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் பரவி வரும் நிலையில், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Views: - 345

0

0