90’s கிட்ஸின் விருப்பமான கமர்கட்டு செய்வது எப்படி???

22 August 2020, 12:00 pm
Quick Share

தேன் மிட்டாய், கமர்கட்டு, பேப்பர் அப்பளம் இதெல்லாம் பார்க்கும் போது நமக்கு நமது கடந்த காலம் தான் நினைவிற்கு வருகிறது அல்லவா…??? ஆனால் இப்போது கடைகளில் இவற்றை எல்லாம் பார்க்க முடியவில்லை. அதனால் என்ன… இன்று நம் வீட்டிலே செய்து சாப்பிடலாம் கமர்கட்டு. 

தேவையான பொருட்கள்:

வெல்லம்- 1/2 கப்

சூடான தண்ணீர்- ஒரு தேக்கரண்டி

துருவிய தேங்காய்- 1 கப்

ஏலக்காய் பொடி- 1/4 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரம் ஒன்று எடுத்து கொள்ளுங்கள். அதில் 1/2 கப் வெல்லம் சேர்த்து அதில் ஒரு தேக்கரண்டி சூடான தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். கட்டி எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். இப்போது இதில் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து கொள்ளலாம். 

தேங்காய் சேர்த்த பின் நன்றாக கிளறி பிறகு இதனை அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் நன்றாக கிளறி கொண்டே இருக்கவேண்டும். தேங்காய் தண்ணீர் அனைத்தையும் உறிஞ்சி விடும். பொருட்கள் அனைத்தும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக கிளறி விட்டு கொண்டே இருக்கவும். 

கிளறாமல் விட்டால் அடி பிடித்து விட வாய்ப்புள்ளது. எனவே கைவிடாமல் கிளறவும். தேங்காய் மற்றும் வெல்லம் ஒட்டாமல் வந்த பின் அடுப்பை அணைத்து இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு ஆற விடவும். பிறகு கையில் எண்ணெய் அல்லது நெய் தடவி கொள்ளுங்கள். கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டை பிடியுங்கள். அவ்வளவு தான்… சுவையான கமர்கட்டு தயார்.

Views: - 88

0

0