இந்த வித்தியாசமான ஸ்னாக்ஸை இன்றே செய்திடுங்கள்…சன்னா சில்லி!!!
6 August 2020, 11:00 amசன்னா மசாலா செய்து இருப்பீர்கள்… இன்று நாம் பார்க்க இருப்பது சன்னா சில்லி. இது மிகவும் வித்தியாசமான ஒரு உணவு வகை. மேலும் ஆரோக்கியமானதும் கூட. இதனை மாலை நேர தின்பண்டமாகவோ அல்லது உணவிற்கு முன் சாப்பிடும் ஸ்டாட்டராகவோ எடுத்து கொள்ளலாம். இப்போது சன்னா சில்லி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை- 3/4 கப்
வெங்காயம்- 2
பூண்டு- 2 பல்
இஞ்சி- ஒரு இன்ச்
பச்சை மிளகாய்- 2
காய்ந்த மிளகாய்- 2
சோள மாவு- 4 தேக்கரண்டி
அரிசி மாவு- ஒரு தேக்கரண்டி
ரவை- ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி
எண்ணெய்- பொரிக்க & தாளிக்க
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கொத்தமல்லி தழை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
சன்னா சில்லி செய்ய முதலில் 3/4 கப் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்து கொள்ளலாம். அதனை ஒரு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு முதல் மூன்று விசில் வரை மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
கொண்டைக்கடலை வெந்ததும் அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து 4 தேக்கரண்டி சோள மாவு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, ஒரு தேக்கரண்டி ரவை, ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவு கொண்டைக்கடலையோடு ஒட்டுமாறு கலந்து விடுங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொண்டைக்கடலையை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடேறியதும் கலந்து வைத்த கொண்டைக்கடலையை போட்டு பொரித்து எடுக்கவும். அனைத்தையும் ஒரே நேரத்தில் போட வேண்டாம். மொறு மொறுவென்று பொரிந்ததும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
இப்போது கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1/4 தேக்கரண்டி கடுகு, பொடியாக நறுக்கிய ஒரு இன்ச் இஞ்சி, 2 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய், 2 காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அடுத்து இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வறுக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு பொரித்து வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும். கடைசியில் கொத்தமல்லி தழை சிறிதளவு தூவி பரிமாறவும்.