கத்திரிக்காய் சாதம்: சிம்பிளான அதே சமயம் டேஸ்டான லன்ச ரெசிபி…!!!
22 January 2021, 7:03 pmபலருக்கும் பிடிக்காத ஒரு காய்கறி என்றால் அது கத்திரிக்காய் தான். ஆனால் உண்மையில் கத்திரிக்காயில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் அடங்கி உள்ளன. அதோடு இல்லாமல் இதனை செய்யும் விதத்தில் செய்தால் நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது கத்திரிக்காயை வைத்து ஒரு டேஸ்டான வெரைட்டி ரைஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
மசாலா அரைக்க:
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- ஒரு தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
சீரகம்- ஒரு தேக்கரண்டி
மிளகு- ஒரு தேக்கரண்டி
பட்டை- 1
கிராம்பு- 4
ஏலக்காய்- 2
காய்ந்த மிளகாய்- 8
புளி- 2 துண்டு
தேங்காய் துருவல்- 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1/2 தேக்கரண்டி
வெல்லம்- ஒரு தேக்கரண்டி
கத்திரிக்காய் சாதம் செய்ய:
கத்திரிக்காய்- 300 கிராம்
வேக வைத்த சாதம்
எண்ணெய்- 1 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- ஒரு தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை
காய்ந்த மிளகாய்- 2
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை- 2 கொத்து
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
வாங்கி பாத் மசாலா தூள்- 4 தேக்கரண்டி
தண்ணீர்- 1/2 கப்
நெய்- ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மசாலா அரைக்க:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுத்து டிரை ரோஸ்ட் செய்து கொள்ளவும்.
*அதே கடாயில் தனியா, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வறுக்கவும்.
*இப்போது தேங்காய் துருவல் சேர்த்து அதிலுள்ள ஈரப்பதம் போகும் வரை வதக்கி கொள்ளலாம்.
*வறுத்த பொருட்களை ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதனோடு வெல்லம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
கத்திரிக்காய் சாதம்:
*கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்க்கவும்.
*கடுகு பொரிந்தவுடன் வேர்க்கடலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
*வேர்க்கடலை வறுப்பட்ட பின் நறுக்கி வைத்த கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
*இந்த சமயத்தில் நாம் அரைத்து வைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
*இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் மூடி வேக வைக்கவும்.
*தண்ணீர் வற்றி கத்திரிக்காய் வதங்கியதும் வேக வைத்த சாதம் சேர்த்து கிளறவும்.
*கடைசி டச்சாக நெய் ஊற்றி சூடாக பரிமாறவும்.
0
0