இறாலை சுருள சுருள வதங்கவிட்டு தொக்கு செய்வோமா…???

17 March 2020, 12:30 pm
Quick Share

இன்று நாம் அனைவருக்கும் பிடித்தமான இறால் தொக்கு எப்படி செய்வதென பார்க்க போகிறோம். இது சாப்பாடு, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று அனைத்து வகை உணவிற்கும் அருமையான தொட்டுக்கையாக இருக்கும். அதன் செய்முறையை தெரிந்து கொள்ள நம்ம சமையல் அறைக்குள் செல்லலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

இறால்- 1/2 கிலோ

வெங்காயம்- 3

தக்காளி- 3

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

சோம்பு- 1 தேக்கரண்டி

குழம்பு மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

மல்லி தூள்- 2 தேக்கரண்டி

சீரகத் தூள்- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

பிரியாணி இலை- 1

பட்டை- 2

ஏலக்காய்- 1

அன்னாசிப்பூ- 1

எண்ணெய்- 3 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

கருவேப்பிலை- 2 கொத்து

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

இறால் தொக்கு செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு பிரியாணி இலை, இரண்டு பட்டை, ஒரு ஏலக்காய், ஒரு அன்னாசிப்பூ போட்டு, மூன்று பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். 

வெங்காயம் வதங்கும் போது ஒரு தேக்கரண்டி சோம்பு போட்டுக் கொள்ளவும். நன்றாக வாசனையாக இருக்கும். இறால் தொக்கிற்கு தேவையான அளவு உப்பு போட்டு கிளறுங்கள். வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்து ஆய்ந்து வைத்த 1/2 கிலோ இறாலை சேர்த்து வதக்குங்கள்.

இறாலோடு ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறிக் கொள்ளலாம். இறால் நன்றாக சுருண்டு வதங்க வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்ற தேவையில்லை. இப்போது 3 தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து அந்த விழுதையும் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்து மசாலா பொருட்களை சேர்க்க ஆரம்பித்து விடலாம். மூன்று தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி மல்லித் தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் சேர்த்து கிளறி விடுங்கள். 

பிறகு இதனை மூடி வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கலாம். அவ்வப்போது மூடியை திறந்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து இரண்டு கொத்து கருவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி தூவி விட்டு இறக்கி விடலாம்.