கத்திரிக்காய் வேண்டாம் என்று ஓடுபவர்கள் கூட இதை விட்டு வைக்க மாட்டார்கள்!!!
28 August 2020, 11:00 amபொதுவாக ஏதாவது டிபன் செய்யும் போது அதற்கு தொட்டு சாப்பிட என்ன செய்வது என்ற குழப்பம் வருவது இயல்பு தான். உங்கள் குழப்பத்தை தீர்க்க உதவும் ஒரு ரெசிபி தான் இன்று நாம் பார்க்க இருப்பது. ருசியான கத்திரிக்காய் மசாலா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்- 1/2 கிலோ
எண்ணெய்- 3 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- 6
தக்காளி- 2
பூண்டு- 6 பல்
இஞ்சி- ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்- 2
காய்ந்த மிளகாய்- 6
மிளகு- ஒரு தேக்கரண்டி
சீரகம்- ஒரு தேக்கரண்டி
முழு தனியா- ஒரு தேக்கரண்டி
துருவிய தேங்காய்- 1/2 கப்
பட்டை- 1
கிராம்பு- 2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
கத்திரிக்காய் மசாலா குழம்பு வைக்க முதலில் நாம் ஒரு மசாலா தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு தேக்கரண்டி முழு தனியா, ஒரு தேக்கரண்டி சீரகம், 6 சின்ன வெங்காயம், 6 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, 2 பச்சை மிளகாய், 6 காய்ந்த மிளகாய், ஒரு தேக்கரண்டி மிளகு மற்றும் இரண்டு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
கூடவே ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும். அடுத்ததாக 1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கி கொள்ளவும். இதனை நன்றாக ஆற வைத்து மைய அரைத்து எடுத்து கொள்ளலாம். பிறகு ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 1/2 கிலோ கத்திரிக்காயை நறுக்கி அதனையும் சேர்த்து வதக்கவும். 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலா சேர்த்து கொள்ளலாம். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியில் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.