குழந்தைகளுக்கு பிடித்த அருமையான பிரவுனி கேக்!!!

8 October 2020, 10:30 am
Quick Share

முன்பெல்லாம் எந்த வித கிரீம் இல்லாமல் பிளெயின் கேக் தான் கடைகளில் விற்கப்படும். ஆனால் தற்போது வித விதமான, வித்தியாசமான பெயர்களில் கேக்குகள் விற்கப்படுகிறது. இன்று நாம் பார்க்க இருப்பது பிரவுனி கேக். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

குக்கிக் சாக்லேட்- 200 கிராம்

வெண்ணெய்- 110 கிராம்

சர்க்கரை- 200 கிராம்

முட்டை- 3

கோகோ பவுடர்- 2 தேக்கரண்டி

உப்பு- 1/4 தேக்கரண்டி

வெண்ணிலா எசன்ஸ்- 1 தேக்கரண்டி

வால்நட்- 1/4 கப்

மைதா மாவு- 130 கிராம்

செய்முறை:

பிரவுனி ரெசிபி செய்ய 200 கிராம் செமி சுவீட் சாக்லேட் எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் குக்கிங் சாக்லேட் என்று கிடைக்கும். இதனை டபுள் பாய்லர் முறையில் நாம் கரைத்து கொள்ள போகிறோம். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதிக்கும் போது அதன் மேலே இன்னொரு பாத்திரத்தை வைத்து சாக்லேட்டை போடவும். 

சாக்லேட்டோடு 1/2 கப் அதாவது 110 கிராம் வெண்ணெய் சேர்க்கவும். சாக்லேட் மற்றும் வெண்ணெய் இரண்டும் உருகி வரும் போது கலந்து விடவும். முற்றிலும் உருகியதும் அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து விடுங்கள். இப்போது 1/2 கப் அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

அடுத்ததாக மூன்று முட்டைகளை சேர்க்கப் போகிறோம். ஆனால் சாக்லேட் ஆறிய பின் தான் முட்டையை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு முட்டையாக சேர்த்து கலந்து விடவும். பிறகு இரண்டு தேக்கரண்டி கோகோ பவுடர், ஒரு தேக்கரண்டி  வெண்ணிலா எசன்ஸ் மற்றும் 1/4 தேக்கரண்டி உப்பு  சேர்க்கவும். கோகோ பவுடர் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. 

இப்போது ஒரு கப் மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். கடைசியாக 1/4 கப் வால்நட்டையும் சேர்க்கவும். வால்நட்டிற்கு பதிலாக முந்திரி பருப்பு கூட சேர்த்து கொள்ளலாம். பிரவுனி செய்வதற்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

தயார் செய்து வைத்த கலவையை ஒன்பது இன்ச் அளவு உள்ள பேக்கிங் பேனின் ஓரங்களில் வெண்ணெய் தடவி அதன் மேல் ஒரு பட்டர் பேப்பரை வைத்து ஊற்றவும். ஓவனை 350°F  ல் சூடு செய்து பேக்கிங் பேனை உள்ளே வைக்கவும். இது அகலமான பாத்திரம் என்பதால் 20 நிமிடங்களில் தயாராகி விடும். 

ஒரு வேலை நீங்கள் குறுகலான பேனில் வைத்தால் 25 நிமிடங்கள் ஆகும். ஓவன் இல்லாதவர்கள் இந்த பிரவுனியை குக்கரில் கூட செய்யலாம். அதற்கு குக்கரின் கீழே உப்பு போட்டு 15 நிமிடங்கள் மிதமான சூட்டில் சூடு செய்ய வேண்டும். பிறகு கலவையை ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி ஊற்றி உள்ளே வைத்தால் 30 நிமிடங்களில் தயாராகி விடும்.

பிரவுனி தயாரான பிறகு அது ஆறியதும் வெட்டி பீஸ் போட்டு சாப்பிடலாம். இது ஐஸ்கிரீமுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்….

Views: - 39

0

0