ஆரோக்கியமான காரட், பீன்ஸ், வாழைக்காய் அவியல் கூட்டு செய்யலாம்!!!

18 March 2020, 10:16 pm
Quick Share

அவியல் கூட்டு சுவையாக இருப்மதோடு ஆரோக்கியம் தரும் ஒரு உணவாக அமைகிறது. பல விதமான காய்கறிகளை கொண்டு இந்த கூட்டை செய்வதனால் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் ஒரே உணவில் கிடைத்து விடுகிறது. இந்த அவியல் கூட்டின் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காரட்- 100 கிராம்

பீன்ஸ்- 100 கிராம்

கொத்தவரங்காய்- 50 கிராம்

அவரைக்காய்- 50 கிராம்

சௌ சௌ- 50 கிராம்

வெள்ளரிக்காய்- 1

மாங்காய்- 1

முருங்கைக்காய்- 1

வாழைக்காய்- 1/2

கத்திரிக்காய்- 2

உருளைக்கிழங்கு- 1

தேங்காய்- 1/2 மூடி

மஞ்சள் தூள்- 1தேக்கரண்டி

தயிர்- 3 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 6

தேங்காய் எண்ணெய்- 5 தேக்கரண்டி

கருவேப்பிலை- ஒரு கொத்து

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

அவியல் கூட்டை தேங்காய் எண்ணெயில் செய்தால் தான் சுவை கூடுதலாக இருக்கும். தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள் கடலை எண்ணெயில் செய்து கொள்ளலாம். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.

எண்ணெய் காய்ந்த பிறகு 100 கிராம் காரட், 100 கிராம் பீன்ஸ், 50 கிராம் கொத்தவரங்காய், 50 கிராம் அவரைக்காய், 50 கிராம் தோல் சீவி நறுக்கிய சௌ சௌ, தோல் சீவி நறுக்கிய 1/2 வாழைக்காய், தோல் சீவி நறுக்கிய ஒரு உருளைக்கிழங்கு, இரண்டு கத்திரிக்காய், ஒரு நறுக்கிய மாங்காய், ஒரு வெள்ளரிக்காய் மற்றும் ஒரு நறுக்கிய முருங்கைக்காய் போட்டு வதக்கவும்.

எல்லா காய்கறிகளையும் நீட்டு வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். இரண்டு நிமிடங்கள் மட்டும் வதக்கினால் போதும். இப்போது ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடலாம். அதிகமாக தண்ணீர் ஊற்றினால் காய்கறிகள் குழைந்து விடும். 

மேலும் குக்கரில் இருந்து ஒரு விசில் மட்டும் வந்தால் போதும். இதற்கு இடையில் ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 மூடி துருவிய தேங்காய் போட்டு கூடவே ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் 6 பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு விசில் வந்த பிறகு குக்கரை திறந்து அரைத்து வைத்த பேஸ்டை சேர்த்து விடலாம்.

இதனோடு மூன்று தேக்கரண்டி தயிரையும் போட்டு கிளறி விடுங்கள். ஒரு நிமிடம் மட்டும் இருந்தால் போதும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடலாம். அவியல் கூட்டு ரொம்ப தண்ணியாகவோ அல்லது கெட்டியாகவோ இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும். இப்போது ஒரு பேனை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை ஊற்றி ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு தாளித்து அவியல் கூட்டில் சேர்த்து சூடாக பரிமாறலாம்.