ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கடாய் பன்னீர் வீட்டில் செய்வது எப்படி???

9 September 2020, 8:16 pm
Quick Share

இந்த ரெசிப்பிக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. ஹோட்டல்களுக்கு சென்று உணவு சாப்பிடுவதை நாம் அனைவரும் தவிர்த்து வரும் இச்சமயத்தில் உங்களுக்கு பிடித்தமான கடாய் பன்னீர் எவ்வாறு செய்வது என பார்க்கலாம்….

தேவையான பொருட்கள்:

பன்னீர்- 200 கிராம்

பெரிய வெங்காயம்- 3

தக்காளி- 3

பூண்டு- 7 பல்

இஞ்சி- ஒரு துண்டு

குடை மிளகாய்- 1

பிரியாணி இலை- 2

பட்டை- 2

காய்ந்த மிளகாய்- 2

வர மல்லி- 1 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

சோம்பு- 1 தேக்கரண்டி

ஏலக்காய்- 2

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு- 10

காய்ந்த வெந்தய இலைகள்- 1 தேக்கரண்டி

வெண்ணெய்- 2 தேக்கரண்டி

எண்ணெய்- 4 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

இந்த கடாய் பன்னீர் செய்ய முதலில் கடாய் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு  கடாயில் ஒரு பிரியாணி இலை, 2 காய்ந்த மிளகாய், ஒரு தேக்கரண்டி  வர மல்லி, ஒரு தேக்கரண்டி  சீரகம், ஒரு தேக்கரண்டி  சோம்பு, 1/2 தேக்கரண்டி  மிளகு, ஒரு பட்டை, 2 ஏலக்காய் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். 

வறுத்த பிறகு ஆற வைத்த இதனை நைசாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நறுக்கிய குடை மிளகாய், 200 கிராம் பன்னீர் போட்டு வதக்கவும். ஒரு தக்காளியை விதைகளை நீக்கி அதனையும் சேர்த்து வதக்கவும். ஒரு பெரிய வெங்காயத்தையும் கூட சேர்த்து கொள்ளவும்.

குடை மிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி அனைத்தையும் பெரிய அளவில் வெட்டிய பிறகே சேர்க்கவும். இது மூன்று நிமிடங்கள் மட்டும் வதக்கினால் போதுமானது. வதங்கியதும் ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக கடாயில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் விட்டு ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை,  ஏழு பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, 2 நறுக்கிய பெரிய வெங்காயம், 2 தக்காளி சேர்த்து வதக்கவும்.

மேலும் தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி  மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி  காஷ்மீரீ மிளகாய் தூள், 10 முந்திரி பருப்பு சேர்த்து விடுங்கள். தக்காளி வெங்காயம் வதங்கி சாஃப்டாக மாறியதும் ஆற வைத்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி  வெண்ணெய் ஊற்றவும்.

அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும். இதனை மூடி வைத்து மூன்றில் இருந்து நான்கு நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு மேலும் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி காய்ந்த வெந்தய இலைகளை கசக்கி சேர்க்கவும். கடாயை மூடி விட்டு 5 நிமிடங்கள் கொதிக்கட்டும். எண்ணெய் பிரிந்து வெளியேறியதும் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Views: - 0

0

0