ஹோட்டல் சுவை கொஞ்சமும் மாறாமல் சிக்கன் டிக்கா மசாலா வீட்டில் செய்வது எப்படி..???

25 August 2020, 11:00 am
Quick Share

ஹேட்டலுக்கு சென்று தான் சிக்கன் டிக்கா மசாலா சாப்பிட வேண்டும் என்பதில்லை. இதனை செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானது அல்ல. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சிக்கன் டிக்கா மசாலாவை சுலபமாக செய்து விடலாம். இப்போது இதனை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

சிக்கன்- 1/2 கிலோ

பெரிய வெங்காயம்- 3

தக்காளி- 2

தயிர்- 1/2 கப்

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

சீரகத் தூள்- 1 தேக்கரண்டி

மல்லி தூள்-2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது-2 தேக்கரண்டி

மிளகாய் தூள்-3 தேக்கரண்டி

எலுமிச்சம் பழச் சாறு- 1 தேக்கரண்டி

குடை மிளகாய்- 2

எண்ணெய்- 4 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

பிரியாணி இலை- 1

கிராம்பு- 3

ஏலக்காய்- 3

முந்திரி பருப்பு பேஸ்ட்- 2 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

சிக்கன் டிக்கா  செய்வதற்கு முதலில் நாம் சிக்கனை ஊற வைக்க வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி சீரக தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி மல்லி தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 1/2 கப் தயிர், ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு, 2 தேக்கரண்டி  எண்ணெய், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது நடுத்தர அளவில் வெட்டி வைத்த சிக்கனை சேர்த்து பிசையுங்கள். பிறகு இரண்டு குடை மிளகாய் மற்றும் இரண்டு பெரிய வெங்காயத்தை சிக்கன் அளவிற்கே வெட்டி இதனோடு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். இந்த கலவை ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள்.

அரை மணி நேரம் கழித்து ஒரு குச்சியில் நாம் பிசைந்து வைத்த சிக்கன், வெங்காயம் மற்றும் குடை மிளகாயை குத்தி வைக்கவும். பிறகு ஒரு கடாயை நன்றாக சூடாக்கி நாம் குத்தி வைத்த குச்சியை வைத்து நாலு பக்கத்திலும் வேகுமாறு திருப்பி போட்டு எடுத்து வைக்கவும். 

சிக்கன் டிக்கா இப்போது தயார். அடுத்ததாக டிக்கா மசாலாவை தயார் செய்து விடலாம். அதற்கு ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு தேக்கரண்டி  சீரகம், ஒரு பிரியாணி இலை, 3 ஏலக்காய், 3 கிராம்பு, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி  மல்லி தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

பிறகு இரண்டு தக்காளியை அரைத்து இதனுடன் ஊற்றவும். இது நன்றாக வதங்கட்டும். வெங்காயம், தக்காளி இரண்டும் வதங்கி பேஸ்ட் ஆனதும் இரண்டு தேக்கரண்டி முந்திரி பருப்பு பேஸ்ட் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்கும் போது நாம் செய்து வைத்த சிக்கன் டிக்காவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மட்டும் வைத்து அடுப்பை அணைத்து விடலாம். கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். 

சுவையான சிக்கன் டிக்கா மசாலா தயார். 

Views: - 53

0

0