இனி அதிக எண்ணெய் செலவு செய்யாமல் வீட்டிலே தட்டை செய்யலாம்!!!

Author: Hemalatha Ramkumar
26 June 2023, 7:43 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

பலருக்கு தட்டை ஃபேவரெட்டான ஸ்நாக்ஸ் ஆக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் அதனை வீட்டில் செய்ய மாட்டார்கள். கடைகளில் தான் தட்டை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் கடைகளில் விற்கப்படும் தட்டை ஆரோக்கியமானதா என்பது நமக்கு நம்மால் கண்டுபிடிக்க முடியாது. எந்த ஒரு பொருளையையும் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிடுவதில் இருக்கக்கூடிய மனதிருப்தி எதிலுமே வராது. வீட்டிலேயே எளிமையான முறையில் அதிக எண்ணெய் செலவாகாமல் தட்டை எப்படி செய்வது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

தட்டை செய்வதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக ஆறு பல் பூண்டை தோல் உரித்து உரலில் இடித்து வைத்துக் கொள்ளவும். 10 மிளகு மற்றும் அரை ஸ்பூன் சீரகத்தை பொடியாக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து மாவாக அரைத்து எடுத்து வைக்கவும்.

இவற்றை தயார் செய்து விட்டால் தட்டையை எளிதாக செய்துவிடலாம். இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டு கப் பச்சரிசி மாவு, அரைத்து வைத்த பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், ஊற வைத்த கடலை பருப்பு, இடித்த பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கைகளால் ஒரு முறை கிளறி கொள்ளவும்.

பின்னர் இரண்டு ஸ்பூன் சூடான எண்ணெயை ஊற்றி கிளறவும். நாம் சூடாக ஊற்றிய எண்ணெய் மாவின் எல்லா இடங்களிலும் படுமாறு கலந்து கொள்ளவும். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவை பிசையவும். மாவை கட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் தட்டை சுடும் பொழுது அதிக எண்ணெய் செலவாகமலும், மொறுமொறுப்பாகவும் கிடைக்கும்.

மாவு பிசைந்ததும் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வாழை இலை ஒன்று எடுத்து அதில் எண்ணெய் தடவி உருண்டையை வைத்து தட்டவும். கிண்ணம் அல்லது டம்ளர் இருந்தால் அதனை வைத்து அழுத்தி எடுக்கும் பொழுது தட்டையின் வடிவம் ரவுண்டாக கிடைக்கும். இப்படி ஒவ்வொன்றாக செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நாம் தயார் செய்து வைத்த தட்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். அவ்வளவுதான் மொறு மொறுப்பான இப்போது தயார்.

Views: - 250

0

0