இந்த ரசப்பொடி வச்சு ரசம் செய்து பாருங்க… தெருவே மணக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
10 October 2024, 7:43 pm

பொதுவாக தமிழ்நாட்டில் அனைவரது வீட்டிலுமே மதிய உணவுக்கு ஒரு குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், தயிர் அல்லது மோர் கட்டாயமாக இருக்கும். ஆனால் தினமும் வைக்கப்படும் இந்த ரசம் ஒரே மாதிரியாக வைத்தாலும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ருசியில் நமக்கு கிடைக்கும். நாம் நினைத்தபடி ரசத்தை வைப்பது சவாலாக இருக்கிறதே என்று பல பெண்கள் வருத்தப்படுவதுண்டு. உங்களுக்காகவே இந்த ஹோம் மேட் ரசப்பொடி. ஃபிரஷாக தினமும் ரசப்பொடி அரைத்து வைப்பவர்கள் கூட இந்த ஹோம் மேட் ரசப்பொடி பயன்படுத்தி நீங்கள் ஒரு முறை ரசம் வைத்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உங்களை பாராட்டுவார்கள்.

தேவையான பொருட்கள் 

2 டீஸ்பூன் துவரம் பருப்பு 

1 டீஸ்பூன் கடலைப்பருப்பு 

3 டீஸ்பூன் தனியா விதைகள்

2 டீஸ்பூன் மிளகு 

1 கொத்து கறிவேப்பிலை 

10 காஷ்மீரி காய்ந்த மிளகாய் 

2 1/2 டீஸ்பூன் சீரகம் 

1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 

1 டீஸ்பூன் பெருங்காய பொடி

செய்முறை

இந்த ரசப்பொடி செய்வதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு ஆகியவற்றை எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ட்ரை ரோஸ்ட் செய்து கொள்ளலாம். வாசனை வரும் வரை இவற்றை வறுத்துக் கொள்ளுங்கள். 

இதில் 3 டீஸ்பூன் தனியா, 2 டீஸ்பூன் மிளகு, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் 10 காஷ்மீரி காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். காஷ்மீரி மிளகாய் இல்லாதவர்கள் சாதாரண 7 – 8 மிளகாயையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக வறுபட்டவுடன் 2 1/2 டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து வதக்கிய உடன் அடுப்பை அணைத்து விடலாம். இந்த பொருட்கள் ஆறியதும் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

அவ்வளவுதான் நம்முடைய  ரசப்பொடி கம கமன்னு தயாராகிவிட்டது. இதனை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளியில் வைத்தாலே ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!