எல்லோரும் விரும்பி உண்ணும் சுவையான ரோட்டுக்கடை மசாலா பூரி!!!

1 August 2020, 4:00 pm
Quick Share

ரோட்டு கடைகளில் விற்கப்படும் மசாலா பூரி சாப்பிட்டு இருக்கீங்களா???மசாலா பூரி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மசாலா பூரியில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை தூவி சாப்பிட்டால் சும்மா சூப்பரா  இருக்கும். அதிகமாக பேசாமல் நேராக செய்முறைக்கு போகலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி- 100 கிராம்

உருளைக்கிழங்கு- 2

பெரிய வெங்காயம்- 2

தக்காளி- 2

இஞ்சி- ஒரு இன்ச் அளவு

பூண்டு- 3 பல்

பச்சை மிளகாய்- 1

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

சீரகத் தூள்- 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா- 1 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

எலுமிச்சை பழம்- 1/2 மூடி

எண்ணெய்- 2 தேக்கரண்டி

மல்லி தழை- சிறிதளவு

பானி பூரி- 15

செய்முறை:

மசாலா பூரி செய்ய முதலில் முந்தைய நாள் இரவே ஊற வைத்து எடுத்த ஒரு கப் பச்சை பட்டாணியை ஒரு குக்கரில் போடவும். இதனோடு தோல் நீக்கிய இரண்டு உருளைக்கிழங்கை நான்கு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும்.

மிதமான சூட்டில் நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம். ஃபிரஷர் அடங்கியதும் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை கொஞ்சமாக மசித்து கொள்ளவும். அடுத்ததாக மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். கடாய் ஒன்றில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.

நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, மூன்று பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். இதனோடு இரண்டு நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். வதக்கிய பின்னர் இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் கடாயில்  ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும்.

பிறகு 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி  சீரகத் தூள், ஒரு தேக்கரண்டி  கரம் மசாலா, காரத்திற்கு ஏற்ப ஒன்றில் இருந்து இரண்டு தேக்கரண்டி  மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது தேவைப்பட்டால் சாட் மசாலா, ஆம்சூர் பவுடர் சேர்த்து கொள்ளலாம்.

ஆம்சூர் பவுடர் புளிப்பிற்காக சேர்க்கப்படும் தூள். அதற்கு பதிலாக நாம் எலுமிச்சை சாறு கூட சேர்த்து கொள்ளலாம். இப்போது மசித்து வைத்த பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்கவும். ஒரு மூடி போட்டு ஐந்தில் இருந்து ஆறு நிமிடங்கள் வரை இதனை வேக வைக்கவும். ஆறு நிமிடங்களுக்கு பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்த பிறகு அரை மூடி எலுமிச்சை பழச்சாற்றை சேர்க்கவும். பிறகு ஒரு கையளவு மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். இந்த மசாலாவை அப்படியேவும் சாப்பிடலாம். அல்லது பானி பூரி கலந்து கூட சாப்பிடலாம். மசாலா பூரி செய்ய நீங்கள் ஏற்கனவே பானி பூரியை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு தட்டு அல்லது பவுலில் பத்து பதினைந்து பானி பூரியை உடைத்து போட்டுக் கொள்ளவும். இதன் மேல் நாம் தயார் செய்து வைத்த மசாலாவை ஊற்றவும். பிறகு புதினா சட்னி மற்றும் புளி சட்னியை ஒரு கரண்டி அளவு ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயத்தை தூவி விடவும். கடைசியில் ஓமப் பொடி மற்றும் மல்லித் தழை தூவினால் சுவையான மசாலா பூரி தயார்.

Views: - 0

0

0