கடைகளில் விற்கப்படுவது போலவே பீட்சா செய்வது எப்படி???

By: Udayaraman
14 October 2020, 10:21 pm
Quick Share

இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி அனைவருக்கும் பிடித்தமான பீட்சா. இதனை கடையில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை. சுகாதாரமான முறையில் வீட்டில் பீட்சா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

மைதா மாவு- 350 கிராம்

சர்க்கரை- 2 தேக்கரண்டி

ஈஸ்ட்- 1 1/2 தேக்கரண்டி

எண்ணெய்- 2 தேக்கரண்டி

மொசரெல்லா சீஸ்- 250 கிராம்

செடார் சீஸ்- 100 கிராம்

பீட்சா சாஸ்- தேவையான அளவு

பெரிய வெங்காயம்- 1

குடை மிளகாய்-3

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பீட்சா செய்வதற்கு நாம் முதலில் மாவு தயாரிக்க வேண்டும். மாவு ரெடி பண்ண ஈஸ்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதற்கு ஒரு பவுலில் 250 ml வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து கொள்ளவும். அந்த தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, 1 1/2 தேக்கரண்டி ஈஸ்ட் போட்டு கலக்கி ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து நுறை நுறையாக வந்து ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி இருக்கும்.

இப்போது ஒரு மிக்ஸிங் பவுலில் 350 கிராம் மைதா மாவு எடுத்துக் கொள்ளவும். மைதா மாவோடு 1 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் இரண்டு தேக்கரண்டி  எண்ணெய் ஊற்றி கலக்கவும். நடுவில் ஒரு குழி பறித்து ஆக்டிவேட் ஆன  ஈஸ்டை ஊற்றி நன்றாக பிசையவும். இதனை பத்து நிமிடங்கள் இழுத்து பிசையவும். கையில் ஒட்டாமல் வந்த பின்னர் ஒரு பவுலில் எண்ணெய் தடவி மாவின் மேலேயும் எண்ணெய் தடவி ஒரு ஈர துணி போட்டு மூடி வைக்கவும்.

இந்த மாவு ஒன்றரையில் இருந்து இரண்டு மணி நேரம் வரை இரண்டு மடங்காக ஆகும் வரை ஊறட்டும். இப்போது ஓவனை 450°F ல் சூடாக்கி கொள்ளவும். மாவு இரண்டு மடங்காக ஆன பிறகு அதனை பேக்கிங் பேனில் வைத்து விரித்து விடவும். மெலிசாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் மீடியம் அளவில் விரித்து கொள்ளவும்.

விரித்து ஓரங்களை அழித்தி விடவும். ஒரு ஃபோர்க் ஸ்பூன் எடுத்து எல்லா இடங்களிலும் குத்தி விடவும். பிறகு அதன் மேல் பீட்ஸா சாஸ் தடவவும். அடுத்ததாக 250 கிராம் மொசரெல்லா சீஸை துருவி மேலே போடவும். தேவைப்பட்டால் 100 கிராம் செடார் சீஸையும் சேர்த்து கொள்ளலாம். சீஸின் மேலே நீட்டு வாக்கில் அரிந்த பெரிய வெங்காயம், சிவப்பு, பச்சை, மஞ்சள் குடை மிளகாய் மற்றும் ஆலிவ் தூவி விட்டுக் கொள்ளுங்கள்.

மீண்டும் மேலே கொஞ்சம் போல சீஸ் தூவி இத்தாலியன் சீசனிங் சேர்த்து கொள்ளலாம். தேவைப்பட்டால் சில்லி ஃபிளேக்ஸ் கூட சேர்த்துக்கலாம். பிறகு இதனை ஓவனுக்குள் வைத்து விடலாம். இது தயாராக பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் ஆகும். 

அவ்வளவு தான். சுவையான பீட்ஸா தயாராகி விட்டது.

Views: - 100

0

0