இன்றே உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் ஆரோக்கியமான கறிவேப்பிலை சிக்கன்!!!

22 May 2020, 2:07 pm
how to make the curry leaves chicken in tamil
Quick Share

கருவேப்பிலை பொதுவாக நறுமணத்திற்காக சமையலில் சேர்க்கப்படுவதாக தான் பலரும் நம்பி வருகிறோம். ஆனால் கருவேப்பிலைக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. அதன் மகத்துவம் அறியாமல் சாப்பிடும் போது கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டு உணவை நாம் சாப்பிடுவோம். இன்று நாம் செய்யப் போகும் கருவேப்பிலை சிக்கனில் கருவேப்பிலையை வறுத்து பொடியாக்கி சேர்க்கப் போகிறோம். அதனால் கருவேப்பிலையின் முழு சத்தும் நமக்கு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

சிக்கன்- 250 கிராம்

சின்ன வெங்காயம்- 1 கப்

கருவேப்பிலை- 1 கப்

இஞ்சி- 1 இன்ச் அளவு

பூண்டு- 3 பல்

பட்டை- 1

கிராம்பு- 2

ஏலக்காய்- 3

சோம்பு- 1 tbsp

சீரகம்- 1 tbsp

மிளகு- 1 tbsp

மஞ்சள் தூள்- 1/4 tbsp

மல்லி தூள்- 1 tbsp

எண்ணெய்- 3 tbsp

உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

முதலில் நாம் கருவேப்பிலை பொடியை தயார் செய்து கொள்ளலாம். ஒரு கடாயில் ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, மூன்று ஏலக்காய், ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு போட்டு இரண்டு நிமிடம் மிதமான சூட்டில் வறுக்கவும். பிறகு அரை கப் கருவேப்பிலை போட்டு மறுபடியும் இரண்டு நிமிடம் வறுக்கவும். 

நாம் வறுத்து வைத்த இந்த பொருட்களை ஆற வைத்து பிறகு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு வானலில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு மூன்று பல் பூண்டு, ஒரு இன்ச் அளவுக்கு இஞ்சி நறுக்கி போடவும். மூன்று பச்சை மிளகாய் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

இப்போது 1/4  டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு கப் சின்ன வெங்காயம் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு இரண்டு கொத்து கருவேப்பிலை போட்டு, நாம் தயார் செய்து வைத்த கருவேப்பிலை பொடியையும் சேர்க்கவும். இதனோடு தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி தூள் போட்டு கிளறி விடவும். 

ஏற்கனவே நாம் செய்து வைத்த பொடியில் போட்ட ஒரு டேபிள் ஸ்பூன் மிளகே இந்த கருவேப்பிலை சிக்கனுக்கு போதுமான அளவு காரத்தை கொடுக்கும். காரம் அதிகமாக வேண்டும் என்று நினைத்தால் தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம். கடைசியாக 250 கிராம் எலும்பு இல்லாத சிக்கனை சேர்த்து நன்றாக கிளறவும். 

கருவேப்பிலை சிக்கனோடு நன்றாக கலக்கும்படி கிளறி தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அப்படியே வேக வைக்கவும். சிக்கன் வேக வெகு நேரம் எடுத்துக் கொள்ளாது. சிக்கன் நன்றாக வெந்ததும் இறக்கி வைத்து விடலாம். அருமையான கருவேப்பிலை சிக்கன் தயார். வாங்க சாப்பிட்டு பார்க்கலாம்…

Leave a Reply