ஒரே ஒரு குடை மிளகாய் இருந்தால் போதும்… இன்றைய லன்ச் பாக்ஸ் தயார்!!!

Author: Hemalatha Ramkumar
9 April 2023, 7:20 pm

இன்று என்ன சமைப்பது என்ற கவலை எல்லா பெண்களுக்குமே இருக்கும் ஒன்று தான். அதிலும் வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் தலையை போட்டு பிய்த்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த கவலை இனி உங்களுக்கு இல்லை. இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபியை ரொம்ப சுலபமாக ஒரே ஒரு குடை மிளகாய் வைத்து செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய குடை மிளகாய் பிரைட் ரைஸ் எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம்.

அதற்கு முதலில் ஒரு டம்ளர் அரிசியை உதிரி உதிரியாக வேக வைத்து வடித்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் நான்கைந்து பற்கள் பூண்டை நறுக்கி சேர்க்கவும். பின்னர் இரண்டு வெங்காயத்தை நீட்டு வாக்கில் நறுக்கி அதையும் சேர்த்து கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி போல வதங்கியதும் மல்லித் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/4 தேக்கரண்டி உப்பு , அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

இப்போது ஒரு குடை மிளகாயை நறுக்கி சேர்த்து கொள்ளலாம். சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலா அனைத்தும் குடை மிளகாயில் சேரும்படி கொதிக்க விடவும். கடைசியில் நாம் ஆற வைத்த சாதத்தை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?