டீ டைம் ஸ்னாக்ஸ்… ருசியான மொறு மொறு பன்னீர் பக்கோடா!!
13 August 2020, 2:00 pmபொதுவாக மாலை நேரங்களில் டீ, காபி குடிக்கும் போது ஏதாவது சூடாக மொறு மொறுவென்று சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தான் நாம் அனைவரும் விரும்புவோம். அதிலும் காபியோடு பக்கோடா சாப்பிடும் சுவை இருக்கே… சொல்லில் அடங்காது. அப்படிப்பட்ட சுவையான பன்னீர் பக்கோடா எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர்- 200 கிராம்
வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 2
இஞ்சி- ஒரு தேக்கரண்டி நறுக்கியது
கொத்தமல்லி தழை- சிறிதளவு
புதினா- சிறிதளவு
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
கரம் மசாலா- ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள்- ஒரு தேக்கரண்டி
பெருங்காயத் தூள்- 1/4 தேக்கரண்டி
கடலை மாவு- 1/4 கப்
அரிசி மாவு- 2 தேக்கரண்டி
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
பன்னீர் பக்கோடா செய்வதற்கு முதலில் 200 கிராம் பன்னீரை துருவி எடுத்து கொள்ளவும். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய பன்னீர், நீட்டு வாக்கில் அரிந்த இரண்டு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை மற்றும் புதினா தழை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி சீரகத் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து கலந்து விடுங்கள். மசாலா அனைத்தும் வெங்காயம் மற்றும் பன்னீரோடு ஒட்டி வருமாறு கலந்து விடவும். பிறகு 1/4 கப் கடலை மாவு மற்றும் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கொள்ளலாம்.
இப்போது கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருண்டை பிடிக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் அதிகமாக ஊற்ற கூடாது. பக்கோடா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பக்கோடாவை போட்டு பொரித்து எடுத்து கொள்ளுங்கள். இதனை புதினா சட்னி அல்லது சாஸ் கொண்டு பரிமாறவும்.