மதுரை ஸ்பெஷல் மொறு மொறு கறி தோசை!!! செய்யலாமா?

16 March 2020, 12:37 pm
Quick Share

மதுரை பல விஷயங்களுக்கு பெயர் போனது. மதுரை மல்லி, ஜிகர்தண்டா, மதுரை மீனாட்சி அம்மன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். மதுரையில் பிரபலமான மற்றொன்று கறி தோசை. அதனைப் பற்றிய செய்முறையை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். வாங்க நம்ம சமையல் அறைக்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்:

மட்டன் கறி- 1/4 கிலோ

பெரிய வெங்காயம்- 2

தக்காளி- 2

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

சோம்பு- 1/2 தேக்கரண்டி

மட்டன் மசாலா- தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

மல்லி தூள்- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி

மல்லி இலை- சிறிதளவு

எண்ணெய்- 3 தேக்கரண்டி

தோசை மாவு- ஒரு கப்

முட்டை-1

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

கறி தோசை செய்வதற்கு முதலில் குழம்பை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு 1/2 தேக்கரண்டி சோம்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கி கொண்டிருக்கும் போதே இரண்டு தக்காளியை நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.

வெங்காயம் மற்றும் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும். இப்போது 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மட்டன் மசாலா, ஒரு தேக்கரண்டி மல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளலாம்.

அடுத்து 1/4 கிலோ எலும்பு இல்லாத ஆட்டுக் கறியை சுத்தம் செய்து அதனை கொத்துக் கறியாக கொத்தி சேர்த்து கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் வதக்கிய பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து விடலாம். மட்டன் வெந்து குழம்பு தயாராக மூன்று விசில் விட்டுக் கொள்ளுங்கள். குழம்பு கெட்டியாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

விசில் வந்த பின் சிறிதளவு கொத்தமல்லி தழை மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு தூள் போட்டு குழம்பை ஓரமாக எடுத்து வைத்து விடலாம். பிறகு ஒரு பவுலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு தூள் போட்டு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தேய்த்து ஒரு கரண்டி மாவை ஊற்றி விரித்துக் கொள்ளவும். பிறகு அடித்து வைத்த முட்டை மேலே ஊற்றி பரப்பவும். இதே போல செய்து வைத்த மட்டன் குழம்பையும் ஒரு கரண்டி ஊற்றி விரித்து விடுங்கள். தோசையை சுற்றி எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளலாம். 

அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கம் வெந்த பிறகு தோசையை திருப்பி போட்டு மறுபக்கமும் வேகுமாறு வைக்கவும். வெந்த பிறகு அதனை ஒரு தட்டில் வைத்து தோசையின் மேல் சிறிதளவு நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.