புளித்து போன தயிரை இப்படி ருசியான மோர் குழம்பாக மாற்றி விடலாமே!!!

15 August 2020, 10:37 am
Quick Share

வீட்டில் தயிர் அதிகமாக மீந்து போய் விட்டால் அதனை என்ன செய்வதென்று இனி விழிக்க வேண்டாம். அதனை சுவை மிகுந்த மோர் குழம்பாக மாற்றிக் கொள்ளலாம். மோர் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

தயிர் – 1 கப்

துருவிய தேங்காய்- 1/2 கப்

பச்சை மிளகாய்- 3

காய்ந்த மிளகாய்- 3

சின்ன வெங்காயம்- 2

வெள்ளரிக்காய்- 2

கடுகு- 1/8 தேக்கரண்டி

கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

இஞ்சி- 1 துண்டு

கறிவேப்பிலை- 1 கொத்து

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

பெருங்காயம்- சிறிதளவு

செய்முறை:

முதலில் மோர் குழம்பு செய்வதற்கு கடாய் ஒன்றில் தண்ணீர் ஊற்றி வெள்ளரிக்காயை வெட்டி சேர்த்து கொள்ளவும். வெள்ளரிக்காய் இல்லையெனில் தண்ணீர் காய்கறிகளான தடியங்காய், பூசணிக்காய் கூட சேர்த்து கொள்ளலாம். வெண்டைக்காய் சேர்க்க விரும்புபவர்கள் புளி குழம்பிற்கு சேர்ப்பது போல  வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்கி சேர்த்து கொள்ளலாம்.

வெள்ளரிக்காய் வேகும் நேரத்தில் நாம் தேங்காயை அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய், இரண்டு சின்ன வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, 1/2 தேக்கரண்டி சீரகம், மூன்று பச்சை மிளகாய், இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்த கடலைப் பருப்பை சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெள்ளரிக்காய் வெந்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 தேக்கரண்டி  மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும். இப்போது நாம் அரைத்து வைத்த கலவையை சேர்த்து கொள்ளலாம். ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அலசி அந்த தண்ணீரையும் குழம்போடு ஊற்றுங்கள். இரண்டில் இருந்து மூன்று கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். குழம்பு ஆறிய பின்னர் தான் நாம் தயிரை சேர்க்க வேண்டும்.

அடுத்ததாக மோர் குழம்பை தாளிக்க கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் 1/8 தேக்கரண்டி கடுகு போடவும். கடுகு பொரிந்தவுடன் 1/2 தேக்கரண்டி  உளுத்தம்பருப்பு, சிறிதளவு பெருங்காயம், மூன்று காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, போட்டு இறக்கி தனியாக வைக்கவும்.

இப்போது தயிரை நாம் கடைந்து கொள்ளலாம். கெட்டியான புளிக்கின்ற தயிர் மோர் குழம்பிற்கு அற்புதமாக இருக்கும். தயிரை கட்டி இல்லாமல் நன்றாக கடைந்து குழம்பில் ஊற்றவும். இதனோடு தாளித்த வைத்ததையும் கொட்டவும்.  மோர் குழம்பை ஆறிய பின் பரிமாறினால் நன்றாக இருக்கும். குளிர்ச்சியான மோர் குழம்பு தயாராகிவிட்டது. 

Views: - 86

0

0