ஆஹா அட்டகாசமான சுவை…. இனி நாமே செய்யலாம் பால் கேக்!!!

2 August 2020, 1:27 pm
Quick Share

பால் கேக் பிரபலமான மற்றும் மிகவும் விரும்பப்படும் பாரம்பரிய இந்திய இனிப்புகளில் ஒன்றாகும். ஆனால் இந்த இனிப்பை நீங்கள் சாப்பிட  விரும்பினால், நீங்கள் அதை கடைக்கு சென்று வாங்க வேண்டியதில்லை. இதைத் தயாரிக்க சற்று நிறைய நேரம் எடுத்தாலும், இதற்கு தேவையான பொருட்கள் நம் வீட்டில் எளிதில் கிடைக்கக் கூடியவையே – பால், சர்க்கரை மற்றும் நெய். எனவே, இந்த ருசியான இந்திய இனிப்பை தயாரிப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அதன் செய்முறையை இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

முழு கொழுப்புள்ள பால்- 2 லிட்டர்

எலுமிச்சை சாறு- ½ தேக்கரண்டி

சர்க்கரை- ¾ கப்

நெய்- 3 தேக்கரண்டி

செய்முறை:

* அடி கனமான பாத்திரம் ஒன்றில் இரண்டு லிட்டர் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். தொடர்ந்து கிளறி, அதிக தீயில் கொதிக்க வைக்கவும். அதன் அளவு பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைக்கவும்.

* அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பாலைக் கரைத்து, கிளறவும். எலுமிச்சை சாறு ஊற்றும் போது அதன் கொட்டைகள் பாலில் விழாதவாறு வடிகட்டி சேர்த்து கொள்ளவும். பால் திரிந்து தண்ணீர் தனியாக பால் கட்டிகள் தனியாக வரும் வரை இன்னும் சிறிது நேரம் வேகவைக்கவும். பால் அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் தொடர்ந்து பாலை கிளறும்போது சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக  சேர்க்கவும். ஒரே நேரத்தில் சேர்க்க வேண்டாம். பால் படிப்படியாக சற்று பழுப்பு நிறமாக மாறும்.

* இப்போது சிறிது நெய் சேர்த்து ஒரு பழுப்பு கலவையைப் பார்க்கும் வரை சுமார் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கிளறவும். 

* இதன் பிறகு ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய பால் சுவீட்டை அதில் சமமாக பரப்பி, அடர்த்தியான துணியால் மூடி வைக்கவும். சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் இது அப்படியே இருக்கட்டும்.

* அது குளிர்ந்ததும், செவ்வக துண்டுகளாக கேக்கை வெட்டி சந்தோஷமாக சாப்பிடலாம்.

Views: - 25

0

0