பத்தே நிமிடத்தில் அருமையான மதிய உணவு தயார்….என்ன உணவுன்னு யோசிக்கிறீங்களா???

5 September 2020, 9:14 pm
Quick Share

அவசரமாக எங்காவது கிளம்பும் போது குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் எள்ளு சாதம். எள்ளு பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இப்போது இந்த ருசியான எள்ளு சாதம் எவ்வாறு செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள்ளு- 2 தேக்கரண்டி

துவரம் பருப்பு- ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு- ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- ஒரு தேக்கரண்டி

முந்திரி பருப்பு- 8

வேர்க்கடலை- சிறிதளவு

காய்ந்த மிளகாய்- 8

கொப்பரை தேங்காய்-  ஒரு தேக்கரண்டி

வடித்த சாதம்- ஒரு கப்

பெருங்காய தூள்- ஒரு சிட்டிகை

நெய்- 2 தேக்கரண்டி

எண்ணெய்- 2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை:

எள்ளு சாதம் செய்ய முதலில் ஒரு பொடி தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் ஊற்றாமல் இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள்ளு, ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பு, 6 காய்ந்த மிளகாய், ஒரு தேக்கரண்டி கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்த்து வறுக்கவும். எள்ளு வெடித்து வந்ததும் அடுப்பை அணைத்து இந்த பொருட்களை அரைத்து கொள்ளவும்.

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, சிறிதளவு வேர்க்கடலை, 8 முந்திரி பருப்பு, ஒரு சிட்டிகை பெருங்காய பொடி, 2 காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 

கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு நிறம் மாறியதும் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் வடித்து ஆற வைத்த சாதத்தை சேர்க்கவும். அடுத்து சாதத்தின் அளவுக்கு ஏற்ப  நாம் அரைத்து வைத்த எள்ளு பொடியை சேர்த்து கொள்ளுங்கள். கடைசியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி அடுப்பை அணைத்து விடலாம். ருசியான எள்ளு சாதம் ரெடி.

Views: - 11

0

0