நாளை முதல் வேலையாக பிரேக்ஃபாஸ்டிற்கு சிவப்பு அவல் உப்புமா செய்து பாருங்க…!!!
18 January 2021, 6:30 pmகாலை சிற்றுண்டி என்பது சுவையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் அது வித்தியாசமானதாகவும், ஆரோக்கியம் மிகுந்த ஒன்றாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது சிவப்பு அவல் உப்புமா. இது வித்தியாசமான ருசியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் ஒன்று. இப்போது இந்த ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல்- 1 கப்
நெய்- 1 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 1
பெருங்காயத்தூள்- 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 2
இஞ்சி- ஒரு துண்டு
கறிவேப்பிலை- 1 கொத்து
கேரட்- 1
உப்பு- தேவைக்கேற்ப
வேக வைத்த பச்சை பட்டாணி- 1/2 கப்
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
கொத்தமல்லி தழை- சிறிதளவு
செய்முறை:
சிவப்பு அவல் உப்புமா செய்வதற்கு முதலில் ஒரு கப் அவலை சுத்தம் செய்து அதனை இருபது நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கொள்ளவும். நெய் உருகியதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, துருவிய கேரட் சேர்த்து கிளறுங்கள். உப்புமாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இப்போது வேக வைத்த பச்சை பட்டாணியை போடவும். அடுத்ததாக மஞ்சள் தூள் மற்றும் ஊற வைத்த அவலை சேர்த்து கிளறவும்.
அவலில் உள்ள ஈரப்பதம் முழுவதும் போகும் வரை வதக்கவும். கடைசியில் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். ருசியான, ஆரோக்கியமான சிவப்பு அவல் உப்புமா பரிமாற தயாராக உள்ளது.