சண்டே ஸ்பெஷல் மொறு மொறு வெஜிடபிள் பப்ஸ் ரெசிபி!!!

2 August 2020, 12:50 pm
Quick Share

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு இன்று விடுமுறை நாளாக இருக்கும். எனவே அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சந்தோஷமாக நேரம் செலவழிக்க இந்த  மொறு மொறு வெஜிடபிள் பப்ஸ் செய்து சாப்பிடலாமே….

தேவையான பொருட்கள்:

மைதா- 250 கிராம்

வெண்ணெய்- 125 கிராம்

எண்ணெய்- 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம்- 2

இஞ்சி- ஒரு இன்ச் அளவு

மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

சீரகத் தூள்- 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

தக்காளி- 1

பச்சை பட்டாணி- 1/4 கப்

கேரட்- 1

உருளைக்கிழங்கு- 2

உப்பு- தேவையான அளவு

மல்லி தழை- சிறிதளவு

கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை:

வெஜிடபிள் பப்ஸ் செய்ய முதலில் ஒரு மிக்ஸிங் பவுலில் இரண்டு கப் மைதா மாவு(250 கிராம்) எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி அளவு உப்பு போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். 3/4 கப் தண்ணீர் அளவிற்கு இதற்கு தேவைப்படும். மாவை பிசைந்து விட்டு இரண்டாக பிரித்து எடுங்கள்.

ஒரு பகுதியை எடுத்து முதலில் கீழே கொஞ்சம் போல மைதா மாவை தூவி பிசைந்து வைத்த மாவை மெலிசாக விரித்துக் கொள்ளவும். மேலேயும் மாவு போட்டு விரித்தால் தான் ஒட்டாமல் விரிக்க முடியும். மற்றொரு பகுதி மாவையும் இதே போல் விரித்து கொள்ளுங்கள். பப்ஸ் செய்யும் போது எப்போதும் நாம் மாவு எடுக்கின்ற அளவிற்கு பாதி அளவு வெண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்று நாம் 250 கிராம் மைதா மாவு எடுத்துள்ளதால் 125 கிராம் போல அன்சால்டட் வெண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். வெண்ணெய்யை நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து வையுங்கள். நாம் பயன்படுத்தும் போது வெண்ணெய் சாஃப்டாக இருக்க வேண்டும்.

விரித்து வைத்த மாவின் ஒன்றை எடுத்து அதன் மேல் நாம் வைத்திருக்கும் வெண்ணையில் பாதியை எடுத்து தடவிக் கொள்ளுங்கள். மேலே கொஞ்சமாக மாவு தூவி மற்றொரு விரித்து வைத்த மாவை இதன் மேல் வைக்கவும். பிறகு மேலிருந்து கீழே ஒரு மடிப்பு மடித்து அதே போல் கீழிருந்து மேலே ஒரு மடிப்பு மடித்து கொள்ளுங்கள். மறுபடியும் இதன் மேல் வெண்ணெய் தடவி கொஞ்சமாக மாவு தூவி இரு பக்கமும் பப்ஸ் போல மடித்து விடுங்கள்.

இதனை 1/2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளுங்கள். 1/2 மணி நேரம் கழித்து மாவு தூவி மறுபடியும் விரித்து கொள்ளுங்கள். அதிகமாக அழுத்தம் கொடுக்க வேண்டாம். அழுத்தம் கொடுத்தால் லேயர் வராது. விரித்த பிறகு வெண்ணெய் தடவி முன்பு போல மடித்து குளிர்சாதன பெட்டியில் வையுங்கள்.இதே போல மறுபடியும் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுக்கவும். மொத்தம் மூன்று முறை இதனை செய்ய வேண்டும்.

இப்போது இந்த மாவை மீடியம் அளவில் வேண்டும் விரித்து பீஸ் போட்டு ஃபிரீசரில் வைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக உள்ளே வைக்கக் கூடிய காய்கறிகள் செய்ய ஒரு கடாயில் 1 தேக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி இரண்டு நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு இன்ச் அளவு இஞ்சி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். 

பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1/4 தேக்கரண்டி சீரகத் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1 தேக்கரண்டி  மிளகாய் தூள் மற்றும் ஒரு நறுக்கிய தக்காளி போட்டு வதக்குங்கள். அடுத்து 1/4 கப் ஃபிரஷ் பச்சை பட்டாணி, ஒரு நறுக்கிய கேரட், தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும். காய்கறிகள் வெந்த பிறகு இரண்டு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய மல்லி தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.

இப்போது ஃபிரீசரில் இருந்து பப்ஸ் சீட்டை எடுத்து தேவையான அளவு காய்கறிகளை உள்ளே வைத்து ஓவனில் 400°F ல்  20-22 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து சாப்பிட்டு மகிழலாம்.