பார்த்தாலே சாப்பிட தூண்டும் ருசியான பூண்டு ஊறுகாய்!!!

12 August 2020, 11:00 am
Quick Share

பெரும்பாலான இந்திய வீடுகளில் உணவோடு ஊறுகாய் தொட்டு சாப்பிடுவது வழக்கம். பல விதமான ஊறுகாய்கள் கடைகளில் விற்கப்பட்டாலும் வீட்டில் செய்யப்படும் ஊறுகாய்க்கு அவை ஈடாகாது. இன்று நாம் செய்ய இருப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த பூண்டு ஊறுகாய். இது அனைத்து  உணவுகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷன். 

தேவையான பொருட்கள்:

பூண்டு- 1/4 கிலோ

மிளகாய் தூள்- 1 1/2 தேக்கரண்டி

வெந்தயப்பொடி- 1/2 தேக்கரண்டி

பெருங்காய பொடி- 1/4 தேக்கரண்டி

வெல்லம்- ஒரு தேக்கரண்டி

புளி- எலுமிச்சை அளவு

உப்பு- தேவையான அளவு

நல்லெண்ணெய்- 5 தேக்கரண்டி

கடுகு- ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை:

பூண்டு ஊறுகாய் செய்ய முதலில் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயை ஊற்றி கொள்ளலாம். ஊறுகாய் செய்வதற்கு எப்போதும் நல்லெண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் 1/4 கிலோ தோல் உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். 

பூண்டு நன்றாக வதங்கியதும் அதனை ஆற வைத்து மைய அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இப்போது அதே கடாயில் மேலும் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் ஒரு தேக்கரண்டி கடுகு போட்டு பொரிய விடவும். அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்த பூண்டு விழுதினை சேர்க்கவும். 

பூண்டை நாம் ஏற்கனவே வதக்கி அரைத்துள்ளதால் இதனை அதிக நேரம் வதக்க தேவையில்லை. பூண்டு விழுது வதங்கியதும் 1/4 தேக்கரண்டி பெருங்காய பொடி, 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு எலுமிச்சை பழம் அளவு இருக்கும் புளியை கரைத்து அந்த கரைசலை ஊற்றவும். 

ஊறுகாய்க்கு தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விடவும். ஊறுகாயில் இருக்கும் எண்ணெய் அனைத்தும் பிரிந்து வரும் வரை வதக்கவும். அவ்வளவு தான்… ருசியான பூண்டு ஊறுகாய் தயார்.