சுவைமிக்க வஞ்சரம் கருவாடு தொக்கு!!!

19 March 2020, 8:08 pm
Quick Share

வஞ்சரம் மீன் பெரும்பாலான அனைவருக்கும் பிடிக்கும். இன்று நாம் வஞ்சரம் கருவாடு தொக்கு எப்படி செய்வது என பார்க்கப் போகிறோம். வாங்க நம்ம சமையல் அறைக்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்:

வஞ்சரம் கருவாடு- 1/4 கிலோ

பெரிய வெங்காயம்- 4

தக்காளி- 2

பச்சை மிளகாய்- 2

பூண்டு- 10

கடுகு உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

மல்லி தூள்- 3/4 தேக்கரண்டி

சீரகத் தூள்- 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

கடலை எண்ணெய்- 4 தேக்கரண்டி

கருவேப்பிலை- 2 கொத்து

கொத்தமல்லி தழை- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

வஞ்சரம் கருவாடு தொக்கு செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் நான்கு தேக்கரண்டி கடலை எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு ஒரு தேக்கரண்டி கடுகு உளுத்தம்பருப்பை போடவும்.

பிறகு நான்கு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் அதிகமாக சேர்த்தால் தான் தொக்கு சுவையாக இருக்கும்.  கூடவே பத்து பல் பூண்டை நறுக்கி சேர்த்து கொள்ளலாம். இரண்டு கீறிய பச்சை மிளகாய், இரண்டு கொத்து கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

வெங்காயம் மற்றும் தக்காளி நன்றாக சுருள வதங்க வேண்டும். இப்போது மசாலா பொருட்களை சேர்த்து விடலாம். ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், 3/4 தேக்கரண்டி மல்லி தூள், 1/4 தேக்கரண்டி சீரகத் தூள், ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கிளறி விடுங்கள்.

கூடவே 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி குழம்பை மூடி போட்டு கொதிக்க விடலாம். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் திரிந்து வந்த பிறகு கருவாடை சேர்த்து கொள்ளலாம். 1/4 கிலோ வஞ்சரம் கருவாடை சுடு தண்ணீரில் போட்டு உடனே எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது குழம்பை மீண்டும் ஒரு இரண்டு நிமிடங்கள் மட்டும் மூடி வைத்து கொதிக்க விடவும். பிறகு சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவி சூடாக பரிமாறவும்.