அனைவரும் விரும்பி உண்ணும் பாரம்பரிய திருநெல்வேலி அல்வா!!!

12 August 2020, 8:59 pm
Quick Share

அல்வா என்றாலே நம் நினைவுக்கு வருவது திருநெல்வேலி. திருநெல்வேலி அல்வா என்றால் கண்டிப்பாக நம் எல்லோருக்கும் பிடிக்கும். அல்வா செய்யும் போது சரியான அளவு மற்றும் பதத்தில் செய்தால் தான் நமக்கு கடையில் செய்கின்ற  அல்வா போல் கிடைக்கும். இப்போ பாரம்பரியமான திருநெல்வேலி அல்வா எப்படி செய்யலாம்னு பார்ப்போம் வாங்க…

தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை- 1 கப்( 200 கிராம்)

சர்க்கரை- 3 கப்

நெய்- 1 கப்

தண்ணீர்- 4 கப்

முந்திரி- 15

செய்முறை:

முதலில் ஒரு கப் உடைத்த சம்பா கோதுமையை எட்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். உடைத்த சம்பா கோதுமையாக இருந்தால் கையில் பிசைந்தே பால் எடுத்து விடலாம். ஒரு வேலை நீங்கள் முழு சம்பா கோதுமையாக எடுத்தாலும் பரவாயில்லை. அதனை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது சம்பா கோதுமை எட்டு மணி நேரம் ஊறிய பின்னர் அதனை கையில் பிசைந்து கொள்ளவும். பால் வந்தவுடன் அதனை ஒரு வடிகட்டி வைத்து வடிகட்டி வேறு ஒரு பவுலுக்கு மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள். கோதுமையிலிருந்து பால் வரும் வரை நீங்கள் எடுக்கலாம். இப்போது ஊற்றும் தண்ணீருக்கு அளவு எதுவும் இல்லை.

பால் எடுத்த பின்னர் அந்த பாலை நீலமான ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வையுங்கள். இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் வரை அந்த பால் அப்படியே இருக்கட்டும். மூன்று மணி நேரம் கழித்து பார்த்தால் அந்த பாலானது தெளிந்து அடியில் தங்கி இருக்கும். மேலே இருக்கக் கூடிய தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். ஏனெனில் அந்த தண்ணீரில் பச்சை மற்றும் புளிப்பு வாசனை வரக் கூடும்.

எனவே அந்த தண்ணீரை ஊற்றி விட்டு நான்கு கப் புதிய தண்ணீரை பாலில் ஊற்றுங்கள். இதனை தனியாக எடுத்து வைத்து விட்டு நாம் சர்க்கரை பாகு தயாரித்து விடலாம். சர்க்கரை பாகு தயாரிக்க இரண்டு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். ஒரு கடாயில்  அரை கப் சர்க்கரை போட்டு இரண்டு தேக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றுங்கள். இந்த சர்க்கரையானது பொன்னிறமாக மாறி வரும் வரை இருக்கட்டும். கரிந்து மட்டும் போகாமல் பார்த்து கொள்ளுங்கள்.

மற்றொரு கடாயில்  இரண்டரை கப் சர்க்கரை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள். முதலில் வைத்த சர்க்கரை பொன்னிறம் ஆனதும் இந்த பாகோடு சேர்த்து கொள்ளுங்கள். அல்வாவிற்கு கலர் கொடுப்பதற்காக தான் அரை கப் சர்க்கரையை பொன்னிறமாக்கி நாம் சேர்க்கிறோம். இந்த சர்க்கரை பாகு ஒரு சிறு கம்பி பதம் வந்த பிறகு நாம் தயார் செய்து வைத்த கோதுமை பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதே போல் நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளுங்கள். நெய் ஊற்றி நன்றாக கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஆன பின் நாம் ஊற்றிய நெய் வெளியே வர ஆரம்பித்து விடும். சரியாக ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் கழித்து நெய் அனைத்தும் வெளியில் வந்து,  நாம் செய்து கொண்டு இருந்த அல்வா தயாராகி விடும். 

பாரம்பரியமாக செய்யும் திருநெல்வேலி அல்வாவில் முந்திரி பருப்பு எதுவும் சேர்ப்பது கிடையாது. ஆனால் நாம் வீட்டில் செய்வதால் பதினைந்து முந்திரியை உடைத்து நெய்யில் வறுத்து சேர்த்தால் சுவையான திருநெல்வேலி அல்வா தாயார்.