காரசாரமான வெண்டைக்காய் மிளகு ஃப்ரை செய்து பாருங்கள்!!!

22 September 2020, 9:04 pm
Quick Share

இன்று நாம் பார்க்க இருப்பது காரசாரமான மிளகு வெண்டைக்காய் ஃப்ரை. வெண்டைக்காய் நம் உடலுக்கு பல நன்மைகளை ஆற்றக்கூடியது. இந்த காய்கறியில் உள்ள நார்ச்சத்து சீரான முறையில் செரிமானம் நடக்க உதவி புரிகிறது. அது மட்டும் இல்லாமல் கொழுப்பு அளவை சரியாக பராமரித்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இத்தகைய  சிறப்பு வாய்ந்த வெண்டைக்காயை ருசியான ஃப்ரையாக மாற்றி சாப்பிடலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்- 1/4 கிலோ

பெரிய வெங்காயம்- 1

கடுகு- 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி

பெருங்காய தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகு- 2 தேக்கரண்டி

சீரகம்- 2 தேக்கரண்டி

தேங்காய் துருவல்- 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

எண்ணெய்- 1 1/2 தேக்கரண்டி

பூண்டு- 3 பற்கள்

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காய் ப்ரை செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் 1/4 தேக்கரண்டி பெருங்காய தூள் சேர்க்கவும். 

ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ளவும். ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் 1/4 நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து கிளறவும். வெண்டைக்காயின் பிசுபிசுப்பு போகும் வரை வதக்கவும். காய் பாதி வெந்ததும் இதற்கு தேவையான உப்பு சேர்க்கவும். 

இரண்டு தேக்கரண்டி மிளகு மற்றும் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள். வெண்டைக்காய் முக்கால் பங்கு வெந்ததும் அரைத்து வைத்த பொடியில் இரண்டு தேக்கரண்டி சேர்த்து கிளறவும். பிறகு இரண்டு தேக்கரண்டி துருவிய தேங்காய் மற்றும் மூன்று பல் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். மூன்று நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடலாம். காரசாரமான வெண்டைக்காய் மிளகு ஃப்ரை தயார்.

Views: - 11

0

0