கிரீமி பட்டர் சிக்கன் ரெசிபி ஒரே ஒரு முறை செய்து பாருங்கள்… பிறகு விடவே மாட்டீங்க!!!
31 August 2020, 6:00 pmஇந்த பட்டர் சிக்கன் மிகவும் சுவையான ரிச்சான ஒரு உணவு. ஹோட்டல்களில் செய்யப்படும் சுவை மாறாமல் இருக்க இதில் உள்ள செய்முறையை அப்படியே பின்பற்றுங்கள். அப்போது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ருசியான பட்டர் சிக்கன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன்- 350 கிராம்
வெண்ணெய்- 4 தேக்கரண்டி
தயிர்- 2 தேக்கரண்டி
வெங்காயம்- 130 கிராம்
தக்காளி- 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது- 3 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
கரம் மசாலா- 1 தேக்கரண்டி
பிரியாணி இலை- 1
பட்டை- 1
கிராம்பு- 2
ஏலக்காய்- 3
சர்க்கரை- 1/2 தேக்கரண்டி
காய்ந்த வெந்தய கீரை- 1 தேக்கரண்டி
ஃபிரஷ் கிரீம்- 1/2 கப்
உப்பு- தேவையான அளவு
எலுமிச்சை பழம்- 1/2 மூடி
செய்முறை:
பட்டர் சிக்கன் செய்ய முதலில் நாம் சிக்கனை ஊற வைக்க வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸிங் பவுலில் 350 கிராம் எலும்பு இல்லாத சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். சிக்கனுடன் இரண்டு தேக்கரண்டி தயிர், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு, தேவையான அளவு உப்பு போட்டு பிசைந்து கொள்ளுங்கள்.
இது இருபதில் இருந்து முப்பது நிமிடங்கள் வரை ஊறட்டும். சிக்கன் ஊறிய பின் இதனை வேக வைக்க வேண்டும். அதற்கு ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் விட்டு, வெண்ணெய் உருகியதும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகட்டும். சிக்கன் 80 சதவீதம் வெந்த பின் தனியே எடுத்து வைத்து விடுங்கள்.
இப்போது சிக்கன் வேக வைத்த அதே கடாயில் 150 கிராம் பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து கொள்ளலாம். வெங்காயம் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். கலருக்காக தான் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்கிறோம்.
மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு 200 கிராம் தக்காளியை சேர்க்கவும். தக்காளி வெந்ததும் பத்து பதினைந்து முந்திரி பருப்பை போடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். இதனை மூடி வைத்து பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த கலவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் விடவும். வெண்ணெய் உருகியதும் ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, மூன்று ஏலக்காய் போட்டு அரைத்து வைத்த கலவையை போடவும். பிறகு தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி காய்ந்த வெந்தய இலைகளை கசக்கி சேர்க்கவும். கொதி வந்த பிறகு வேக வைத்த சிக்கனை போடவும்.
சிக்கன் முழுமையாக வெந்த பிறகு 1/2 கப் ஃபிரஷ் கிரீமை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். ரிச்சான கிரீமி பட்டர் சிக்கன் தயார். இது ரொட்டி, நான், ஃபிரைட் ரைஸ்க்கு அருமையான காம்பினேஷன்.
0
0