வேர்க்கடலை வைத்து ஒரு அசத்தலான குழம்பு!!!

20 January 2021, 1:46 pm
Quick Share

வேர்க்கடலை பிடிக்காதவர்களே இல்லை என கூறலாம். வேர்க்கடலை வைத்து வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த வேர்க்கடலை, மசாலா வேர்க்கடலை,  வேர்க்கடலை சட்னி, வேர்க்கடலை பர்பி என பல விதமான ரெசிபிகள் செய்யலாம். இன்று நாம் பார்க்க இருப்பது முற்றிலும் வித்தியாசமான வேர்க்கடலை குழம்பு. இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்கும் செம காம்பினேஷன். இப்போது வேர்க்கடலை குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை- 1 கப்

தேங்காய்- 1/4 கப்

பெரிய வெங்காயம்- 3

தக்காளி- 2

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

கரம் மசாலா- ஒரு தேக்கரண்டி

மல்லி தூள்- 2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 1/2 தேக்கரண்டி

கடுகு- 1/4 தேக்கரண்டி

பட்டை- 1

கிராம்பு- 2 ஏலக்காய்- 2

மிளகு- 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

சோம்பு- 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி

எண்ணெய்- 3 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலை குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு கப் வேர்க்கடலையை ஒரு வாணலியில் சேர்த்து வறுக்கவும். வறுத்த பிறகு அதன் தோல்களை நீக்கவும். இப்போது இதனை ஒரு குக்கருக்கு மாற்றி, கடலை வேக தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடவும். நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம். 

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், மிளகு, சோம்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். குழம்புக்கு தேவையான பேஸ்ட் இப்போது தயாராக உள்ளது. அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு கொத்து கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும். இதன் பச்சை வாசனை போனதும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, இரண்டு தேக்கரண்டி மல்லி தூள், 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்க்கவும். 

இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வாணலியை ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும். பிறகு அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட் மற்றும் வேக வைத்த வேர்க்கடலை சேர்க்கலாம். வேர்க்கடலை வேக வைத்த தண்ணீரையும் இதனோடு ஊற்றவும். தேவைப்பட்டால் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 7 -8 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Views: - 0

0

0