நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா கூடாதா…???

Author: Hemalatha Ramkumar
15 January 2023, 3:37 pm
Quick Share

பச்சரிசி, வெல்லம் மற்றும் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் சர்க்கரை பொங்கல் தைத்திருநாளின் ஹீரோ ஆகும். பல்வேறு விசேஷ நாட்களில் சர்க்கரை பொங்கல் செய்தாலும் தைத்திருநாள் அன்று செய்யப்படும் சர்க்கரை பொங்கலுக்கு தனிச்சிறப்பு இருக்கிறது. தைத்திருநாள் அன்று காலை சர்க்கரை பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு படைப்பது வழக்கம்.

நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் பொங்கலில் சர்க்கரை பொங்கல் சாப்பிடாமல் தவிர்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான். நீரிழிவு நோயாளிகள் வீட்டில் இருந்தால், அவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா கூடாதா என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம்.

ஆகவே சர்க்கரை பொங்கலில் நாம் என்னென்ன பொருட்களை சேர்க்கிறோம், அதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இதன் மூலம் சர்க்கரை பொங்கல் நம் உடம்புக்கு நல்லதா இல்லையா என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் பாசிப்பருப்பில் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தை பாதுகாக்கும். பாசிப்பருப்பு கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்தை பார்த்து கொள்ளும். மேலும் இதிலுள்ள நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

பொங்கல் பச்சரிசி கொண்டு செய்ப்படுவதால் அதன் மூலம் ஏராளமான கார்போஹைட்ரேட் கிடைக்கும். இது உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். பச்சரிசியில் நார்ச்சத்து குறைவாக உள்ளதால், வயிற்று போக்கு பிரச்சினை உள்ளவர்களுக்கு இது சிறந்தது. மேலும் இதில் அதிக அளவில் கிளைசீமிக் குறியீடு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு இது உகந்தது அல்ல.

அடுத்தபடியாக வெல்லம். என்ன தான் வெல்லம் வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், அதனை குறைவான அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் வெல்லத்தை குறைவான அளவில் சாப்பிட வேண்டும். ஆகவே இறுதியில் நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் வேறு சில உடல்நிலை பிரச்சினை உள்ளவர்கள் சர்க்கரை பொங்ஙலை அறவே ஒதுக்காமல் சிறிதளவு சாப்பிடலாம்.

Views: - 401

0

0