தினமும் ஒரே ஒரு சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டால் இத்தனை நோயை விரட்டலாமா???

Author: Hemalatha Ramkumar
6 June 2023, 3:13 pm

சர்க்கரைவள்ளி கிழங்கு என்பது படர்ந்து வளரக்கூடிய கொடி வகைகளில் கிடைக்க கூடிய, லேசான இனிப்பு சுவை உடைய ஒரு வகை உணவுப் பொருளாகும். இது ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, வெளிர் நீலம் போன்ற நிறங்களில் காணப்படுகிறது. இது கிழங்கு வகையை சார்ந்தது என்பதால் இது வளரக்கூடிய மண்ணின் தன்மையை பொறுத்து இதன் கிழங்குகளின் நிறம் மாறுபடும்.

இதில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, கரோட்டின், பொட்டாசியம், ஆண்டிஆக்சிடண்ட்கள், மெக்னீசியம், நார்சத்து, இரும்புசத்து, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரைவள்ளி கிழங்கு உண்பதால் நமக்கு ஏற்படும் ஒரு சில நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி பார்ப்போம்.

பொதுவாக கிழங்கு வகையான உணவுப் பொருட்களில் கொழுப்புச்சத்து அதிகம் காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் நமது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது.

இதில் உள்ள பி 6 சத்து நுரையீரலின் காற்று குழாய்களில் ஏற்படும் எம்பைசீமா நோய் ஏற்படாமல் தடுத்து, புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் சுவாச பிரச்னையை நீக்குகிறது. மேலும் தொண்டை புற்று நோய் ஏற்படாமலும் காக்கிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலின் ஜீரண சக்திக்கு பெரிதும் உதவுகிறது. உடலின் மற்ற சில நோய்களுக்கு காரணமாக இருக்கக்கூடிய மலச்சிக்கலை போக்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு கிழங்கை வேக வைத்து உண்பதால் மலசிக்கல் தீரும்.

சர்க்கரை வள்ளி கிழங்கில் கரோட்டின்கள் அதிகமாக இருப்பதால் நமது கண் பார்வை தெளிவாக இருப்பதற்கு உதவுகிறது.

குறிப்பிட்ட அளவு சர்க்கரைவள்ளி கிழங்கு உண்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. எனினும், மிக அதிக அளவில் சர்க்கரை வள்ளி கிழங்கை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 100கிராம் என்பது சரியாக இருக்கும்.

இதனை அதிகமாக உண்பதால் பசியின்மை, வாயு தொல்லைகள் மற்றும் தசை பிடிப்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது அனைத்து கிழங்குகளுக்கும் உள்ள இயற்கையான குணமாகும். சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இதயத்திற்கு நன்மை தருபவை. எனினும், இதய நோயின் காரணமாக பீட்டா பிளாக்கர் என்ற ஒரு வகை மருந்தை எடுத்துக் கொள்பவர்களுக்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு அந்த மருந்தின் வீரியத்தை குறைக்கிறது. ஆகவே அவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Super Singer Nithya Shree New Videos Upload ஹீரோயின் மெட்டீரியல்… எப்படி தமிழ் சினிமா மிஸ் பண்ணுச்சு : நித்யஸ்ரீ Cute Video!