பாஜக எம்பிக்கள் 10 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா.. லோக்சபாவில் குறைந்தது பாஜகவின் பலம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2023, 7:41 pm
BJP MP
Quick Share

பாஜக எம்பிக்கள் 10 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா.. லோக்சபாவில் குறைந்தது பாஜகவின் பலம்!!!

கடந்த நவம்பரம் மாதம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மிசோரம் மாநிலத்துளுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும் தெலுங்கானாவில் காங்கிரஸும், மிசோரத்தில் ZPM கட்சியும் வெற்றிபெற்றன.

இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக எம்பிக்களை வைத்து பிரச்சாரம் மட்டுமெ செய்யாமல், அவர்களையே தேர்தலில் போட்டியிட வைத்தது. மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்ட எம்பிக்களை போட்டியிட வைத்து வெற்றிபெறலாம் என்பது அக்கட்சியின் வியூகம். அது ஓரளவு வெற்றியும் பெற்றது.

தேர்தலில் போட்டியிட்ட பாஜக எம்பிக்கள் 12 பேரில் 10 பேர் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகினர். இந்த நிலையில் அவர்கள் இன்று தங்கள் மக்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். எம்.பிக்கள் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பிக்க சபாநாயகரை சந்திப்பதற்காக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஒரு குழுவினரை அழைத்துச் சென்றார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து நரேந்திரா தொமர், பிரகலாத் படேல், ரித்தி பதக், ராக்கேஷ் சிங், உதய் பிரதாப் சிங் ஆகியோர் சபாநாயகரை சந்தித்தனர். அதேபோன்று ராஜஸ்தானில் இருந்து ராஜ்யவர்தன் ரத்தோர், கிரோடி லால் மீனா மற்றும் தியா குமாரி ஆகியோரும், சத்தீஸ்கரில் இருந்து அருண் சாவ் மற்றும் கோமதி சாய் ஆகியோரும் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைவர் பிரகலத் படேல் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த பிறகு, நான் லோக்சபா எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்து உள்ளேன். விரைவில், அமைச்சரவையில் இருந்தும் ராஜினாமா செய்வேன்,” என்று தெரிவித்தார்.

ராஜஸ்தானை சேர்ந்த பாபா பாலக்நாத் மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் இன்னும் தங்களுடன் ராஜினாமாவை சமர்ப்பிக்கவில்லை. மக்களவையில் மொத்தம் 301 பாஜக எம்பிக்கள் இருந்த நிலையில் இவர்களின் ராஜினாமாவால் எண்ணிக்கை 291 ஆக குறைந்து இருக்கிறது.

பாஜக சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பெரும்பான்மை பெற்றதை அடுத்து ஆட்சி அமைக்க தயாராக உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை தங்கள் மாநில ஆளுநர்களிடம் வழங்கி உள்ளனர்.

Views: - 212

0

0