திருப்பதி – திருமலை இடையே 100 மின்சார பேருந்துகள் இயக்க முடிவு : திருப்பதி வேதஸ்தானம் திட்டம்!!

19 June 2021, 8:09 pm
Tirupati Electirc Bus - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி திருமலை இடைய அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விரைவில் மின்சார பேருந்துகள் வாங்க உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

ஓய்.வி.சுப்பா ரெட்டி தலைமையில் இரண்டு ஆண்டுகள் பதவி காலத்துடன் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு இன்று தன்னுடைய பதவி காலத்தை நிறைவு செய்தது.

இந்த நிலையில் நேற்று சுப்பா ரெட்டி தலைமையிலான அறங்காவலர் குழுவின் நிறைவு ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் நிருபர்களுடன் பேசிய அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என்னுடைய தலைமையில் அறங்காவலர் குழுவை அமைத்தபோது தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்கும் வகையில் அவர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த அதற்கான முயற்சியை இன்னும் 90 நாட்களுக்குள் பூர்த்திசெய்ய குழு அமைக்கப்படும். குழுவின் பரிந்துரைகளுக்கு பின் ஏழுமலையான் கோவிலில் உள்ள பிரசாத தயாரிப்பு கூடம் மற்றும் தேவஸ்தானத்தின் பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பணி நிரந்தர உத்தரவு வழங்கப்படும்.

திருப்பதி மலையை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பகுதியாக அறிவிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக திருப்பதி மலையில் இயக்கப்படும் இலவச பேருந்துகளை அகற்றிவிட்டு மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திருப்பதி-திருமலை இடையே மின்சார பேருந்துகளை மட்டுமே இயக்க ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்திற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் இதற்காக 100 மின்சார பேருந்துகளை வாங்கவும் அவர் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனவே விரைவில் திருமலை திருப்பதி இடையே மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.அதேபோல் திருப்பதி திருமலை இடையே மின்சாரத்தால் இயங்கும் டாக்ஸிகளை மட்டுமே இயக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கோவிலுக்கு ஒரு கோ மாதா என்ற எங்களுடைய புதிய திட்டத்தின் கீழ் ஏராளமான கோவில்களுக்கு தலா ஒரு பசு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவுக்கு ஏற்ப திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.திருப்பதி மலையில் தான் ஹனுமான் அவதரித்தார் என்பது எங்களுடைய நம்பிக்கை. அதற்கு தேவையான ஆதாரங்களையும் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.

எனவே இந்த விஷயத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த கூடாது என்பதே எங்களுடைய முடிவு. அனுமதியின்றி திருப்பதி மலையில் வைக்கப்பட்டுள்ள கடைகள் இன்னும் நான்கு நாட்களுக்குள் அகற்றப்படும்.

எங்களுடைய பதவி காலத்தில் விஐபி பிரேக் தரிசனத்தில் இந்த மூன்று முறைகள் ஒழிக்கப்பட்டு ஒரே முறையாக மாற்றம் செய்யப்பட்டது.அதேபோல் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை ஸ்ரீவாணி அறக்கட்டளையின் கீழ் பக்தர்களுக்கு வழங்கி அதன் மூலம் திரட்டப்பட்ட நிதியை பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பாகங்களிலும் ஏழுமலையான் கோயில்களை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஹிந்து தர்ம பிரச்சாரம் என்ற அடிப்படையில் ஏழுமலையான் கோவில்கள் கட்டப்படும் என்று அப்போது கூறினார்.

Views: - 189

0

0