ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்..! திரிபுராவில் போலீஸ் குவிப்பு..!

27 August 2020, 9:47 am
Tiripura_Security_UpdateNews360
Quick Share

திரிபுராவின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆளும் பாஜகவின் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே நடந்த மோதல்களில் 12 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் 5 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்றும் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சட்டம் ஒழுங்கு), சுப்ரதா சக்ரவர்த்தி தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை கலைக்க தெற்கு திரிபுரா மாவட்டம் மற்றும் கோவாய் பகுதியின் சப்ரூம் துணைப்பிரிவில் போலீசார் தடியடி நடத்தியதாகவும், இந்த இடங்களில் தற்போது போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கௌதம் தாஸ், திரிபுரா முழுவதும் 282 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், தொழிலாளர் சட்டத்தை திரும்பப் பெறுவது மற்றும் எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ’வில் வேலை நாட்களை அதிகரிப்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகக் கூறினார்.

“பாஜகவின் சமூக விரோதிகள் எங்கள் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கினர். இந்த மோதல் 30 இடங்களில் நடந்தது. ஆனால், மிகவும் வன்முறையானது ரூபாய்சரி பகுதியில் இருந்தது” என்று தாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி தங்கள் கட்சி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது என்றார்.

இருப்பினும், பாஜக செய்தித் தொடர்பாளர் நபேண்டு பட்டாச்சார்ஜி குற்றச்சாட்டுகளை மறுத்து, இது கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிட்ட வன்முறை என்று கூறினார்.

“ரூபாய்சாரி மோதலில் ஐந்து பாஜக தொண்டர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் தூண்டினர். அவர்கள் இப்போது தலைமறைவாக உள்ளனர்” என்று பட்டாச்சார்ஜி மேலும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பாஜகவினரின் கருத்து உண்மை என நிரூபிக்கும் விதமாக, வன்முறையில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் 4,000’க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக சுப்ரதா சக்ரவர்த்தி கூறினார். இருப்பினும் கலவரக்காரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Views: - 26

0

0