736 மாவட்டங்களில் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..!!
Author: Aarthi Sivakumar7 October 2021, 5:45 pm
உத்தரகாண்ட்: நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,224 பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 35 மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1.84 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையை பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல், தேனி, பெரியகுளம் மற்றும் சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் திறக்கப்பட்டன. அரசு மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவதால், அவசர கால மருத்துவ சேவைக்கு வெளியிலிருந்து ஆக்சிஜன் வாங்க வேண்டியதில்லை.
இதனால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உயிர் காப்பாற்றப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கடந்த காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் அதிகம் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பாலைவனம் முதல் மலைப்பகுதி வரை அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
0
0