சீக்கிய தீவிரவாதிகள் இருவர் கைது..! டெல்லி மற்றும் பஞ்சாப் அரசியல்வாதிகளுக்கு குறி வைத்தது அம்பலம்..!

7 September 2020, 2:01 pm
babbar_khalsa_updatenews360
Quick Share

பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றியாக, டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு இன்று தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பி.கே.ஐ) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை வடமேற்கு டெல்லியில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டிற்குப் பிறகு கைது செய்தது. அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பப்பர் கல்சா இன்டர்நேஷனல் என்பது கனடா, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் செயல்படும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். 

சீக்கியர்களின் நிரங்கரி பிரிவினருடன் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டில் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பு நிறுவப்பட்டது. 1980’களில் பஞ்சாப் கிளர்ச்சியில் இந்த குழு தீவிரமாக இருந்தது. 1990’களில் பாதுகாப்புப் படையினர் இந்த குழுவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையின் பின்னர் அதன் செல்வாக்கு குறைந்தது.    

ஆனாலும் இதன் உறுப்பினர்கள் தொடர்ந்து கனடாவிலிருந்து ரகசியமாக செயல்பட்டு வந்த நிலையில் 2019’ஆம் ஆண்டில், பப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பின் நான்கு உறுப்பினர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

குற்றப்பத்திரிகையில், நான்கு பயங்கரவாதிகள் பஞ்சாபில் பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், சதி செய்வதாகவும் என்ஐஏ குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பூபேந்தர் அல்லது திலவர் சிங் மற்றும் குல்வந்த் சிங் என அடையாளம் காணப்பட்ட இரண்டு பப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பின் பயங்கரவாதிகள் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு ஆறு கைத்துப்பாக்கிகள் மற்றும் 40 தோட்டாக்களை அவர்களிடம் இருந்து மீட்டுள்ளது.

இந்த இரு தீவிரவாதிகளும் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள அரசியல் தலைவர்களைக் கொள்ள சதித் திட்டம் தீட்டி செயல்பட்டு வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

Views: - 0

0

0