ஆசிரமத்தின் அந்தரங்க லீலையை அம்பலப்படுத்திய 2 பேர் கொலை : சாமியார் குர்மீத் ராம் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளி என தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2021, 2:07 pm
Gurmeet Ram Rahim -Updatenews360
Quick Share

தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் ஆசிரமத் தலைவா குர்மீத் ராம் ரஹீம் மற்றும் 4 பேரை அரியானா சிறப்பு சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பெண் துறவிகள் 2 பேரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 2002ம் ஆண்டு சத்ரபதி என்ற பத்திரிக்கையாளர் தனது பத்திரிகையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக புலனாய்வு செய்தி வெளியிட்டார்.

இதன் காரணமாக பத்திரிகையாளரை கடந்த 2002ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். பத்திரிகையாளர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதற்கிடையில் கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ‘பூரா சச்’ என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் பத்திரிகைகளில் வெளியானது.

இதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வெளியானது.

அதில், ரஞ்சித் சிங்கை கொன்ற வழக்கில் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் குற்றவாளி என நீதிபதி சுஷில் கார்க் தீர்ப்பளித்தார். இவருக்கான தண்டனை விவரம் வரும் அக் 12ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

Views: - 523

0

0